ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண் விழித்தேன். இடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருந்தது. சத்தத்தில் கலைந்து விட்ட உறக்கம் மீண்டும் என்னை அரவணைக்காது ஏங்க வைத்தது. வயதான உடம்பு குளிர் தாங்காது நடுங்கியது. சூடாக தேனீர் குடித்தால் நன்றாக இருக்கும். உதவிக்கு யாருமில்லை நானே எழுந்து செய்ய வேண்டும். நேரம் பார்த்தேன் மூன்று மணி. எழ நினைத்தாலும் படுக்க உடல் கெஞ்சியது.
உறக்கமின்றி படுத்திருக்கையில் அழைக்காமலேயே பழைய நினைவுகள் வந்து சூழ்ந்து கொண்டது. என்னுடைய எழுபது வருட வாழ்க்கையில் எத்தனை அனுபவங்கள். சந்தோஷம், துக்கம், கண்ணீர், பயம், அவமானம் இப்பொழுது தனிமை. இந்த அனுபவங்கள்தான் இன்று முடிவு எடுக்கும் துணிச்சலை எனக்குத் தந்திருக்கிறது.
இருபத்திநாலு வயதில் வேலை கிடைத்ததும் வெள்ளவத்தையில் ஒரு வீட்டில் அறை எடுத்து தங்கினேன். நான்கு வருடங்கள் பொறுப்புகளற்ற சந்தோஷமான நாட்கள். அப்பா எனக்கு கொழும்பிலேயே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார். வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடிக் கட்டிடத்தில் இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை சொந்தமாய் வாங்கி வாழ்க்கையை ஆரம்பித்தோம்.
சில நாட்களிலேயே கணவரின் இயல்பான குணங்கள் வெளிவரத் தொடங்கியது. அனைத்து விஷயங்களிலும் தானே முடிவு எடுப்பதையும், தான் செய்வதுதான் சரி என்று பிடிவாதமாய் இருப்பதையும், மறுத்து ஏதாவது சொன்னால் கோபப்பட்டு கத்துவதையும் பார்த்து பயந்தேன். தவறு செய்தால் பொறுமையாய் சொல்லித் திருத்தும் அப்பாவின் வளர்ப்பில் மென்மையாய் வளர்ந்த எனக்கு இவரின் கோபத்தை தாங்க முடியவில்லை.
“கத்தாமல் மெல்லமாய் சொல்லுங்கோவன். ஏன் கோவப்படுறீங்கள்” மெல்லிய குரலில் சொன்னேன்.
“எதிர்த்துக் கதைக்காதை. எனக்கது பிடிக்காது” மௌனமானேன்.
வீட்டுக்கு பெயின்ட் அடித்த போதும் தேவையான தளபாடங்கள் வாங்கும் போதும் என் விருப்பத்தைக் கேட்கவில்லை. அவரின் விருப்பப்படியே எல்லாம் செய்தார்.
“நானும் இருக்கிற வீடு. எனக்கும் பிடிச்சதாய் இரண்டு பேரும் போய் வாங்கி இருக்கலாமே”
“ஏன் நான் வாங்கினதில என்ன குறை. உன்ர சீதனக் காசும் போட்டு வாங்கினது எண்டு சொல்லிக் காட்டுறியோ. உழைக்கிற திமிர் கேள்வி கேட்கிறாய். நீ வேலைக்குப் போகத் தேவையில்லை. குடும்பத்தைப் பார்க்க எனக்குத் தெரியும்” மனதை நோக வைத்தார். வேலையை விட்டு வீட்டில் இருக்கலாமோ என்று தோன்றும். கஷ்டப்பட்டு உழைக்கும்போது மதிக்காதவரின் குணம் வீட்டில் இருந்தாலும் மாறப் போவதில்லை. என் தேவை எல்லாவற்றுக்கும் அவரிடம் போய் நிற்க வேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும் வேலையை விடக்கூடாது என்று தீர்மானித்தேன்.
மூன்று வருடங்களுக்குப் பின் குமரன் பிறந்தான். ஆறுமாத பிரசவ லீவு முடிய அருகிலுள்ள குழந்தைகள் பாதுகாப்பகத்தில் விட்டு வேலைக்குப் போனேன். ஆரம்பத்தில் விடிய எழுந்து சமையலை முடித்து குழந்தையை காப்பகத்தில் விட்டுப் போவது கஷ்டமாக இருந்தது. அவரிடம் உதவி கேட்டால்
“நீ கேட்டு நான் என்ன செய்யிறது” என்பார்.
அவராய் நினைத்தால்தான் வேலைகளைச் செய்வார் பிள்ளையையும் பார்த்துக் கொள்வார். மூன்று வருடங்களுக்குப் பின் குழலி பிறந்தாள். சமாளிக்க கற்றுக் கொண்டேன். செலவுகள் அதிகரிக்க ஒருவரின் சம்பளத்தில் சமாளிக்க முடியாது என்று தெரிந்தும் நான் சொல்வதைக் கேட்டால் தன் கௌரவம் குறைந்து விடும் என்று நினைப்பவரை எப்படி மாற்ற முடியும். நாட்கள் நகர அவரின் குணத்துக்கேற்ப என்னை மாற்றிக் கொண்டேன். வீடு அமைதியானது.
பிள்ளைகளிடமும் அதே கண்டிப்போடு இருந்தார். அவர்களின் சின்ன சின்ன ஆசைகளுக்கு மதிப்பு கொடுத்ததில்லை. குமரன் மிருதங்கம் பழக ஆசைப்பட்டான். குழலி பாட்டுக் கேட்டால் அதற்கேற்ப கைகளால் அபிநயம் பிடித்து ஆடுவாள். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற விரும்பினேன் அவர் சம்மதிக்கவில்லை.
“படிப்பு முக்கியம் கவனமாய் படியுங்கோ” குமரன் பயத்தில் திரும்ப கேட்கவில்லை.
“ஏனம்மா நாங்கள் என்ன கேட்டாலும் அப்பா வேண்டாம் எண்டு கத்துறார்”
குழலி கேட்டு அப்பாவிடம் அடி வாங்கினாள்.
இருவருக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பார். திரும்ப சொல்லிக் கொடுக்க பொறுமை இல்லாமல் சத்தம் போடுவார். அடியும் விழும். குமரன் இருந்து படிப்பான். குழலி எழுந்தோடி வருவாள்.
“அப்பாவோட படிக்கேலாது. நீங்கள் சொல்லித் தாங்கோம்மா”
“கோபப்படாமல் பொறுமையாய் சொல்லிக் குடுங்கோ” பல தடவை சொல்லியும் கேட்கவில்லை. கண்டிப்பு கூடியதே தவிர குறையவில்லை.
குமரனுக்கு க.பொ.த சாதாரணதரத்தில் அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபேறு கிடைத்தது.
“எந்த நேரமும் கோபப்படுறன் எண்டாய். கண்டிப்பாய் இருந்தபடியால்தானே நல்ல றிசல்ட் எடுத்தான்” என்றார்.
“அன்பாய் சொன்னாலும் அண்ணா எடுத்திருப்பார்” பட்டெனச் சொன்னாள் குழலி.
“எதிர்த்து கதைக்காதை எண்டு எத்தனை தடவை சொல்லுறது”
“உண்மையைத்தானே சொன்னேன்”
வீட்டில் அவள் மட்டும்தான் பயமில்லாமல் பதில் சொல்லுவாள். அவளிடம் முறைத்து விட்டு குமரனிடம்
“சயன்ஸ் படிக்கிறது நல்லது. மெடிசினுக்கு போக வேணும் எண்டு நினைச்சுப் படி” என்றார்.
“இல்லையப்பா. எனக்கு மற்ஸ் படிக்கத்தான் விருப்பம். மற்ஸுக்கு ‘டி’ எடுத்த ஏழு பேரும் மற்ஸ் படிக்க பேர் குடுத்திட்டம்”
“ஆரைக்கேட்டுப் பெயர் குடுத்தனி. நீ டொக்டராய் வரவேணும் போய் சயன்ஸை படி”
சந்தோஷ முகம் மாறி அழுகை வந்தது குமரனுக்கு. என்னால் தாங்க முடியவில்லை. “கஷ்டப்பட்டு படிக்கிறவன் விரும்பினதைப் படிக்கட்டும் விடுங்கோ”என்றேன்.
“இல்லை சயன்ஸ் படிக்கட்டும். டொக்டர் எண்டு சொன்னால் எவ்வளவு பெருமை”
“அப்பா சயன்ஸை விட மற்ஸ் படிக்கிறது எனக்கு ஈஸியாயிருக்கும். நான் மற்ஸ் படிக்கிறன்” தயங்கியபடி சொன்னான்.
“அண்ணா உனக்கு எது விருப்பமோ படி. நானும் மற்ஸ்தான் படிப்பன்”
“நீ கதைக்காத வாயை மூடு. குமரன் டொக்டராய் வரவேணும் எண்டது என்ர ஆசை. அவன் சயன்ஸ்தான் படிப்பான். அதில மாற்றமில்லை” கண்டிப்புடன் சொன்னார்.
அழுகையை மறைத்துக் கொண்டு உள்ளே போனவனைப் பார்த்து
“ஏனம்மா அப்பா இப்பிடி இருக்கிறார்” என்றபடி அவனுக்கு ஆறுதல் சொல்ல உள்ளே போனாள் குழலி.
குமரன் படிக்க தொடங்கிய பின் சயன்ஸை விருப்பத்தோடு படித்தான். அவன் படிப்புக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து வகுப்புகளையும் ஒழுங்கு செய்து கொடுத்தார். அவன் படிக்காத நேரங்களில் எல்லோரிடமும் கோபப்பட்டார். அவனுக்கு மெடிசின் கிடைத்ததும்
நான் நினைச்சதைச் சாதிச்சு விட்டேன் என்று பெருமைப்பட்டார்.
குழலியும் க.பொ.த உயர்தரத்தில் நினைத்தபடி மற்ஸ் படித்தாள்.
பல்கலைக்கழகம் போனவன் படிப்பு முடிய ஒரு வருட பயிற்சியையும் முடித்து விட்டு வேலையில் சேர்ந்தான்.
ஆறுமாதமிருக்கும் ஒருநாள் தயக்கத்தோடு ஒரு பெண்ணின் படத்தைக் காட்டினான்.
“கீர்த்தி என்னோட படிச்சவள். இப்ப டொக்டராய் வேலை செய்யிறாள். இரண்டு வருசமாய் விரும்பிறனம்மா. அப்பாட்ட சொல்லுங்கோ”
கேட்டதும் தலையில் இடி விழுந்தது போலிருந்தது.
“ஏண்டா இப்பிடிச் செய்தாய். அப்பா அறிஞ்சால்… தான் நினைக்கிறதுதான் நடக்கவேணும் எண்டு நினைக்கிறவர் சம்மதிக்க மாட்டாரடா… நினைக்கவே பயமாயிருக்குது”
“என்னம்மா நீங்கள் இப்பவும் பயந்து கொண்டிருக்கிறீங்கள். நாங்களும் வளர்ந்திட்டம் எங்களுக்கும் முடிவு எடுக்கத் தெரியும்” அவனும் பிடிவாதமாய் சொன்னான்.
அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவர் கோபத்துடன் வெளியே வந்தார்.
“என்னடா சொன்னாய். படிச்சிட்டால் பெரிய மனுசனோ… முடிவு எடுக்கிற அளவுக்கு வளர்ந்திட்டீங்களோ… உன்னை டொக்டராக்கி இவளை இஞ்சினியராக்கி இந்த நிலைமைக்கு கொண்டு வர எவ்வளவு கஷ்டப்பட்டன். பார்த்து பார்த்து ஒவ்வொண்டையும் செய்யிற எனக்கு எப்ப கலியாணம் செய்து வைக்க வேணும் எண்டு தெரியாதா. வேலை தொடங்கி ஒரு வருசமாகேல கலியாணம் கேக்குதோ… எல்லாத்தையும் விட்டிட்டு வேலையை மட்டும் பார். கையில ஒண்டுமில்லை கலியாணத்துக்கு அவசரம்”
பெரிய குரலில் கத்தினார்.
குமரன் என்னைப் பார்த்தான். நான் அவன் கண்களில் கண்ணீரைப் பார்த்தேன். ஆனாலும்
அவரின் கோபத்தின் முன் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
“அண்ணா ஆசைப்பட்டதை படிக்க விடேல. கலியாணத்தையாவது அவற்ர விருப்பப்படி விடுங்கோவன் வாழப் போறது அவர்தானே” பயமில்லாது முன்னே வந்து சொன்னாள் குழலி.
“வாயை மூடு கதைக்காதே. எப்ப பார் குறுக்க வந்து கொண்டு. போடி அங்கால” அவளிடம் எரிஞ்சு விழுந்தார்.
“எங்கட விருப்பப்படி ஒருநாளும் இருக்க விட்டதில்லை. கேட்டால் கத்துறீங்கள். உங்களோட அம்மா எப்பிடி பொறுமையாய் இவ்வளவு காலமும் இருந்தாவோ”
குழலி சொன்னதைக் கேட்டதும் ஆத்திரத்துடன் அவள் பக்கம் கையை ஓங்கினார்.
அடித்துவிடுவாரோ…. என்ற பயத்தில் குழலிக்கருகில் போனேன். என்னைக் கண்டதும்
“ஒழுங்காய் வளர்க்கத் தெரியாது. கதைக்க விட்டு வேடிக்கை பார்க்கிறியோ”
என் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். எதிர்பாராத அடியில் வெலவெலத்துப் போனேன். பிள்ளைகளை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. பிள்ளைகளும் நொந்து போனார்கள்.
அதன்பின் இதைப்பற்றி கதைக்க ஒருத்தருக்கும் துணிச்சல் வரவில்லை. வேலைக்குப் போவதும் வருவதுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.
அன்று லீவு நாள். எல்லோரும் வீட்டிலிருந்தோம்.
“எனக்கு தெரிஞ்ச இடம். பெடியனும் இஞ்சினியர். குழலிக்குப் பாப்பம். பொருந்தி வந்தால் அவளுக்குச் செய்திட்டு குமரனுக்கும் நல்ல இடமாய்ப் பாத்து செய்வம்” என்றார்.
“எனக்கு கலியாணம் வேண்டாம். நான் செய்ய மாட்டன்” திடுக்கிட்டு குழலியைப் பார்த்தேன்.
“என்னடி சொல்லுறாய். ஏன் வேண்டாம்”
“ஏச்சு வாங்கி அடங்கி ஒடுங்கி வாழுற வாழ்க்கை எனக்கு வேண்டாம். உழைக்கிறன். இப்படியே சந்தோஷமாய் இருப்பன்”
“எத்தனைபேர் சந்தோஷமாய் இருக்கினம் உனக்கும் நல்ல வாழ்க்கை அமையுமடா. ஓமெண்டு சொல்லும்மா. நீ செய்தால்தானே அண்ணாக்கும் செய்து வைக்கலாம்”
“அண்ணான்ர மனசை உடைச்சிட்டீங்கள். ஆரைச் செய்து வைக்கப் போறீங்கள். என்னை விடுங்கோ. எனக்கு வேண்டாம்”
அதட்டி உருட்டி பணிய வைக்கும் அப்பாவால் கூட அவளை அசைக்க முடியவில்லை. அதை ஏற்றுக் கொள்ள அவராலும் முடியவில்லை. அவரின் கோபமும் கத்தலும் இன்னும் அதிகமானது.
ஒரு பக்கம் தான் விரும்பியவளோடு இணைந்து வாழ முடியவில்லையே என்ற விரக்தியில் சந்தோஷங்களைத் தொலைத்த முகத்தோடு வளைய வரும் குமரனை நினைத்து கவலைப்படுவதா இல்லை திருமணமும் வேண்டாம் வாழ்க்கையும் வேண்டாம் என்று பிடிவாதமாய் நிற்கும் குழலியை நினைத்து கவலைப்படுவதா… இவை எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் வீம்புடன் நிற்கும் இவரோடு போராடுவதா…
வருடங்கள் போய்க் கொண்டிருந்தது. எந்த மாற்றமும் நிகழவில்லை.
எப்போதும் இறுக்கமான முகத்தோடு காணப்படும் அவரின் முகம் அன்று மிகவும் சோர்வாகயிருந்தது. வேலைக்குப் போக ஆயத்தமாகி வாசலுக்குப் போனவர் திரும்ப வந்து கதிரையில் சாய்ந்தபடி அமர்ந்து கண்களை மூடிக் கொண்டார். முகம் வேர்த்துக் கொட்டியது. “என்ன செய்யுது. ஏதாவது வேணுமா” பதறியபடி கேட்டேன்.
அவரால் பேசமுடியவில்லை. திடீரென நெஞ்சைப் பிடித்தபடி துடித்துக் கொண்டிருந்தார். கத்திய சத்தத்தில் பிள்ளைகள் ஓடி வந்தார்கள். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக ஆயத்தமானபோது தலை ஒரு பக்கமாய் சரிவதைப் பார்த்து உடல் நடுங்கியது. கண்மூடித் திறக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. ஏன் நடந்தது… எப்படி நடந்தது… ஒன்றும் புரியாமல் அப்படியே உறைந்து போய் விட்டேன்.
அன்பாய் கதைத்ததில்லை. சிரித்து சந்தோஷமாய் இருந்ததில்லை. எந்த நேரமும் கோபமாய் இறுக்கமாய் இருந்து என்னத்தை சாதித்தார். மனஅழுத்தம் இப்ப உயிரைப் பறித்து விட்டதே…
ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்து கலங்கிக்
கொண்டிருந்தேன். வயதும் ஏறிக் கொண்டு போகிறதே. நானே குமரனிடம் சென்று கீர்த்தியைப் பற்றிக் கேட்டபோது ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றான்.
குழலியிடம் கேட்டேன்.
“அப்பாவுக்கு விருப்பமில்லை வேண்டாம் எண்டு நீங்கள் அண்ணாவுக்குச் சொன்னீங்கள். அவன் அம்மா கவலைப்படுறா எண்டு சொல்ல பிரச்சனை பெரிசாகி இரண்டு பேரும் இப்ப கதைக்கிறது இல்லையாம். கீர்த்தியும் இன்னும் செய்யேல” என்றாள்.
“அப்பா பிடிவாதமாய் இருந்ததாலதானே நான் வேண்டாம் என்றேன். அவரை மீறி என்னால என்ன செய்ய முடியும்” அழுகையை அடக்க முடியவில்லை.
எப்படியாவது குமரனோடு இதைப்பற்றி கதைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். கதைக்கவே மறுத்துவிட்ட குமரனையும் கீர்த்தியையும் சமாதானப் படுத்தி சம்மதிக்க வைத்தேன்.
“நாங்கள் விரும்பினாலும் உங்க இரண்டு பேருடைய சம்மதத்தோடதான் கலியாணம் செய்ய வேணும் எண்டு ஆசைப்பட்டோம். ஆனா இவ்வளவு காலமும் எங்களைச் சேரவிடாமல் பிரிச்சு வைச்சிட்டீங்களே. நீங்கள் நினைச்சிருந்தால் எப்பவோ செய்து வைச்சிருக்கலாம்” கீர்த்தியின் மனதிலுள்ள கோபம் வார்த்தையில் தெரிந்தது.
என் நிலைமை தெரியாமல் அவள் சொன்னதைக் கேட்டு மனம் புண்ணானது.
எல்லாம் சரிவந்து திருமணம் நடந்தபோது இருவருக்கும் முப்பத்திநாலு வயதாகிவிட்டது. திருமணமான பின் என்னோடிருக்க கீர்த்தி சம்மதிக்கவில்லை. என்மீதுள்ள கோபத்தில் என்னை நெருங்கவிடாமல் தூர விலக்கி வைத்து அலட்சியமாக நடந்து கொள்வதைப் பார்த்து உள்ளுக்குள் நொருங்கிப் போனேன். குமரனிடமும் என் ஆதங்கத்தை சொல்ல முடியவில்லை. அப்பாவுக்குப் பயந்து அவர் சொல் கேட்டு நடந்தவன் இன்று தன் மனைவி சொல் கேட்டு நடக்கிறான். அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து என்னை ஆறுதல் படுத்திக் கொண்டேன். இருவரும் லண்டனுக்குப் போக முயற்சி செய்தார்கள். வயதான காலத்தில் மகன் வீடு இல்லையென்பதை உணர்ந்து கொண்டேன்.
குழலியின் கவலை என்னைத் தொடர்ந்தது. அவளுக்கும் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விட வேண்டும் என்ற தவிப்பு என்னை உறங்க விடவில்லை.
நிம்மதி இல்லாமல் நான் தவிப்பதைப் பார்த்து
“எனக்குப் பொருத்தமாய் நானே பாக்கிறனம்மா. அவசரப்படவேண்டாம்” என்றாள்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு யாதவனை அறிமுகப்படுத்தினாள். சந்தோஷமாக திருமணத்தை நடத்தினேன்.
பிள்ளைகளுக்கு விரும்பிய வாழ்க்கையைக் கொடுத்தது எனக்கும் நிம்மதியைத் தந்தது.
குழலியும் யாதவனும் என்னோடு இருப்பார்கள் என்று நினைத்தேன்.
அவர்களாலும் என்னோடு இருக்க முடியவில்லை.
“அம்மா, நடக்க முடியாமல் படுக்கையில இருக்கிற யாதவனின்ர அம்மாவை நாங்கள்தான் பாக்கவேணும். அங்க இருந்தாலும் அடிக்கடி வந்து உங்களை பாக்கிறம்”
என்று சொல்லி விட்டுப் போனார்கள்.
வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தபோது தனிமை தெரியவில்லை . பென்ஷன் கிடைத்தபின் வீட்டிலிருக்க மூச்சு முட்டியது. பயந்து கவலைப்பட்டு வாழ்ந்த வாழ்க்கைதான் கண்முன்னே நிழலாடியது.
இன்று மனம் விட்டுக் கதைக்க வேணும் சிரிக்க வேணும் என்று தோன்றுகிறது. ஆனால் யாரும் என்னருகில் இல்லை. தனிமை என்னைப் பயமுறுத்தியது. எவ்வளவு காலம் இப்படித் தனிமையில் தவிக்கப் போகிறேன்.
ஐந்து வருசமோ பத்துவருசமோ… இனி வாழும் வாழ்க்கை எனக்காக வாழ வேண்டும்…
ஆசை மனதில் துளிர்விட்டு வளர்ந்தது. யோசித்து முடிவு எடுத்தேன். என் சிநேகிதி மூலம் அதற்கான ஒழுங்குகளை செய்துவிட்டு அந்த நாளுக்காக காத்திருந்தேன்.
காதைப் பிளக்கும் இடிச்சத்தத்தில் நினைவுகள் கலைந்து எழுந்தேன். ஒன்பது மணியாகி விட்டது. மழையின் சத்தத்தோடு போனும் அடித்துக் கொண்டிருந்தது.
எடுத்தேன். சினேகிதியின் குரல்
“நீ ஆசைப்பட்டபடி எல்லா ஒழுங்கும் செய்தாச்சு. எப்ப வாறாய்”
“பிள்ளைகளிடம் சொல்லி விட்டு நாளைக்கு வாறன்”
இருவருக்கும் எடுத்து என் முடிவைச் சொன்னேன். சம்மதிக்கவில்லை .
“என்னோட வந்து இருங்கோ மாமியோட உங்களையும் வைச்சுப் பாக்கிறம். இல்லை அண்ணாவோட போய் இருங்கோ. பெத்த பிள்ளைகளோட வந்து இருக்கிறதில உங்களுக்கு என்ன பிரச்சனை. நாங்கள் இருக்கும்போது ஏனம்மா இந்த முடிவு எடுத்தீங்கள். சனங்கள் அறிஞ்சால் என்ன சொல்லும் வேண்டாமம்மா” என்றாள். குமரனும் அதையே சொன்னான்.
“மற்றவர்களுக்காக பயந்து வாழ்ந்த வாழ்க்கை போதும். நான் முடிவு செய்திட்டன். விஷயத்தை உங்களுக்குச் சொன்னேன் அவ்வளவுதான். என்னைப் பார்க்க நீங்கள் எப்பவும் வரலாம்”
போனை வைத்துவிட்டு எனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்கினேன் என்னைப் போல் தனிமையில் தவித்து உறவுக்காக ஏங்கும் என் வயதுள்ள தோழிகள் தங்கியிருக்கும் முதியோர் இல்லம் போவதற்கு. நானும் மனம் விட்டு கதைக்க வாய் விட்டுச் சிரிக்க எனக்கொரு இடம் வேண்டுமே…!
.
நிறைவு..
.
.
.
.
விமல் பரம்
.
நன்றி : காற்றுவெளி சித்திரை 2021
சிறுகதைச் சிறப்பிதழ்