மகாலட்சுமி தயக்கத்தோடு தான் அந்த ஊருக்கு வந்தாள். எப்படியும் நல்ல வாழ்க்கை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் தன் கழுத்தை ஆனந்தனுக்கு நீட்டினாள். மகாலட்சுமிக்குப் பிறந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் எரிச்சணாம்பாளையம். தன் கிராமத்து நினைவுகளை அவ்வப்பொழுது பசுமையாக அவள் நினைவுகளில் படர்வ விடுவதுண்டு.
விழுப்புரத்திற்கு வந்து செல்வதென்றால் அவ்வளவு பிரியம் அவளுக்கு. தன்னுடைய கிராமத்தை விட்டு விழுப்புரம் நகரத்தைப் பார்ப்பது அவளுக்கு வெளிநாட்டைப் பார்ப்பது போன்று ஒரு பிரமையை ஏற்படுத்தும். இது ஏதாவது ஒரு பண்டிகைக் காலங்களில் மட்டும் அவளுக்கு நடைபெறும். அண்ணாந்து பார்க்கக்கூடிய கட்டிடங்களைக் கண்டு வியந்தாள். அவள் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ஜோடி செருப்பு மற்றும் துணிகளை தன் தந்தையோடு விழுப்புரத்தில் வாங்கிச் செல்வது வழக்கம். அலங்கார விளக்குகளைக் கண்டு அவள் அதிசயித்துப் போவாள்.
தன்னுடைய கிராமத்தில் இவ்வளவு பிரகாசமான வெளிச்சங்கள் தெரியவில்லையே என்று வருத்தப் படுவதுண்டு. அவளுடைய கிராமத்தில் சுழற்சிமுறை மின்சாரம் என்பதால் நிறைய நேரங்களில் மின்சாரம் இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்து நாட்கள் கழிந்ததால், அவளுக்கு நகரத்தின் வெளிச்சம் ஏதோ செய்தது. அதனால் என்னவோ திருமணம் செய்தால் நிரந்தரமான மின்சார விளக்கு தெரியக்கூடிய மற்றும் எரியக்கூடிய ஊர்களுக்குத் தான் திருமணம் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தோடு தன் திருமணக் கனவுகளில் வாழ்ந்தவளுக்கு ஆனந்தனோடு திருமணம் நடந்தது.
இப்படித்தான் புதுவைக்கு அருகிலுள்ள ஏம்பலம் கிராமத்திற்கு தன் வாழ்க்கையை வாழ ஆனந்தன் வீட்டு மருமகளாக வந்தாள் மகாலட்சுமி.
வந்தவள் தன் கணவனோடு ஆசையோடும், அன்போடும் வாழ்ந்தாள். அவளுக்கு அனைத்து விஷயங்களும் பிடித்துப் போனது. நிற்காமல் குழாயில் வரும் தண்ணீர், தடையில்லாத மின்சாரம், போக்குவரத்து சாலை மற்றும் அவசரத்திற்குக் கடைத்தெரு என சகலமும் தேவையைப் பூர்த்தி செய்வதாக நினைத்தாள்.
தான் பிறந்த கிராமத்தில் வாழும் போது பக்கத்து கிராமத்திற்குச் சென்றுதான் தண்ணீர் எடுத்து வருவாள். அவள் தோழி கமலாவோடு இடுப்பில் ஒரு குடத்தையும், தலையில் ஒரு குடத்தையும் எடுத்துக் கொண்டு, நான்கு ஐந்து முறை இருவரும் சென்று வருவார்கள். சமையலுக்கு, குடிப்பதற்கு என்று ஒவ்வொரு நாளும் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வாள். “நீயும் கல்யாணம் செய்து கொண்டால் தண்ணீரும், மின்சாரம் தடையில்லாத கிராமமாகப் பார்த்துப் போய்விடு” என்று சிலாகித்துப் பேசிக் கொண்டே செல்வார்கள்.
அதற்குக் கமலா “இல்லை மகாலட்சுமி அப்படித்தான் வேண்டும் என்று பார்த்து, எத்தனையோ கிராமத்தை விட்டுவிட்டு அனைவரும் புலம் பெயர்ந்தால் ஒரு இடத்தில் வசிக்கமுடியாது. இது நமது மண், நம்மை வளர்த்த மண். இந்த மண்ணை ஒரு நாளும் குறை சொல்லாதே… ஏதோ பிழைப்பிற்கும் பணத்திற்கும் சென்றவர்கள் இறுதியாக இங்கு வந்துதான் ஆக வேண்டும் மகாலட்சுமி” என்று கூறினாள்.
எப்பொழுதும் பிறந்த மண்ணில் காற்றைச் சுவாசிக்கும் இன்பம் அலாதியானது. அதை நிறைய முறை உணர்ந்திருக்கிறாள்.
இதையெல்லாம் நினைவின் அலைகளாய் அடித்துக் கொண்டே தண்ணீர்க் குழாயில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும்போது வந்த ஆனந்தனைப் பார்த்து, “என்ன இன்று வேலை எதற்கும் போகவில்லையா?” என்று கேட்டாள்.
“இல்லை மகா… இந்த வாரம் நைட் ஷிப்ட் போக வேண்டும்” என்றான்.
ஆனந்தன் செக்யூரிட்டி வேலை செய்கிறான். மாதந்தோறும் சம்பளம் பெற்று அதற்கான செலவும் தயாராகக் காத்திருந்தது. இரண்டு பிள்ளைகளைப்
பெற்றெடுத்தான். இந்த சமூகத்தின் பகட்டு வாழ்வை விரும்பாதவன், தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தான். ஆனால் இன்று அரசுப் பள்ளி என்றால் பின்தங்கிய சமூகத்திற்கான அடையாளத்தைத் தந்துவிட்ட சூழல் வருந்தச் செய்கிறது. பின்தங்கிய சமூகத்திலிருந்து வெளிச்சத்திற்கு வந்த மனிதர்கள் கூட அரசுப் பள்ளியில் தம் குழந்தைகளைச் சேர்ப்பதில்லை.
பிள்ளைகளிடம் ஆனந்தன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ‘என்னைப்போல் துன்பப் படாதீர்கள்’ என்பதுதான். அதற்குக் காரணம் அவனை இந்த சமூகம் புறக்கணித்ததாக உணர்ந்ததுதான். பெரும்பான்மையான முதலாளிகள், தொழிலாளிகளின் நலன் கருதவில்லை என்றும் நினைப்பதுண்டு.
வீட்டு வேலைகளுக்கிடையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு, இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள். அப்பொழுது மெல்ல “ஏங்க நிறைய நாட்களாக கரெண்ட் பில் கட்டாமல் கிடக்கிறது. இந்த மாதம் சம்பளம் வாங்கியாவது கட்டி விடுங்கள்” என்றாள் மகாலட்சுமி.
“பால்பாக்கி, மளிகைக்கடை, மருந்து மாத்திரைகள் மற்றும் நான் போய் வரச் செலவுக்கே சரியாகப் போகிறது மகா. நான் சீக்கிரம் கட்டி விடுகிறேன்” என்றான் ஆனந்தான்.
“இல்லை… பிள்ளைகள் பக்கத்து வீட்டிற்குச் சென்று படித்துவிட்டு வருகிறார்கள். எத்தனை நாள் தான் இப்படி” என்று ஆதங்கப் பட்டாள்.
“சரி மகா. உன்னுடைய மூக்குத்தியைக் கொஞ்சம் கழட்டிக் கொடு. நான் அடமானம் வச்சுட்டு கரெண்ட பில்லை கட்டி விடுகிறேன்” என்று இருவரும் பேசி முடிவெடுத்தார்கள்.
மகாலட்சுமி அப்பொழுது ஆனந்தனிடம்
“ஏங்க நாம்தான் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறோமே… நமக்கு இலவசமா மின்சாரம் தரக் கூடாதா?” என்று கேட்டாள். ஆனந்தன் சிரித்து விட்டு, அவள் கொடுத்த மூக்குத்தியை அடகு வைக்கக் கிளம்பினான். அவள் வீட்டிலும் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.
– ப.தனஞ்ஜெயன்
நன்றி : கீற்று இணையம்