வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் சாலையில் ஒளியை பீச்சிக் கொண்டிருந்தன. யாருமில்லாத அந்த சாலையில் நான் மட்டும் தனியாக நடந்து கொண்டிருந்தேன்.
இன்று பவுர்ணமி நாள். பாலைவன தேசத்தில் பவுர்ணமி நிலவு பார்க்க மிக அழகாக இருக்கும். ஆனால் அதை நான் பார்க்கப் போவதில்லை. பார்த்தால் அந்த பொல்லாத நிலவு என் பிஞ்சு மகளின் முகத்தை நினைவுபடுத்திவிடும். அப்புறம் நான் ரோட்டில் அழுது கொண்டே செல்ல வேண்டியதாகி விடும்.
2 வருடங்கள் தேடிக் கிடைத்த குழந்தை. அவள் பிறந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. புகைப்படமாக மட்டுமே என் மகளை நான் பார்த்திருக்கிறேன். மூன்று முறை விடுமுறை கேட்டும் ஏதேதோ காரணங்கள் சொல்லி office’ல் விடுமுறை தராமல் தட்டிக் கழித்து விட்டார்கள். வேலையை விட்டு விட்டு ஊருக்குப் போய் விடலாம் என்றுதான் தோன்றுகிறது.
ஆனால் என்ன செய்வது அந்த அளவுக்கு மனதில் தைரியம் இல்லையே… இருந்திருந்தால் பத்து நாள் செய்ய வேண்டிய வேலைக்கு ஐந்து நாள் deadline வைத்து இப்படி 11 மணி வரை அலுவலகத்தில் அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து கேள்வி கேட்டிருப்பேனே. ஆமாம் கேட்டுத்தான் என்ன பயன் அவர்களுக்கு நாமெல்லாம் உணவு சாப்பிடும் இயந்திரம் அவ்வளவுதான்.
உணவு என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது. பத்து மணிக்கெல்லாம் கேன்டீனையும் மூடி இருப்பார்கள். ஆர்டர் செய்தாலும் உணவு வர 12 மணிக்கு மேல் ஆகிவிடும். காலையில் எடுத்து வைத்த குப்பூசில் மீதம் இருந்தால் சாப்பிட்டு படுக்கலாம். இல்லையென்றால் என்ன செய்வது; வழக்கம்போல பட்டினிதான்.
டிசம்பர் மாதத்துக் குளிர் காற்று உடலை நடுங்கச் செய்தது. குளிர் தாங்காமல் உடலைத் தேய்த்துக் கொண்டு நடையைக் கொஞ்சம் வேகமாக எடுத்து வைத்தேன்.
புறாக்கூண்டை நெருங்கி விட்டேன். புறாக் கூண்டின் வைஃபை என் மொபைலோடு கனெக்டிகட் ஆகிவிட்டது. நான் அந்த புறாக் கூண்டில் தான் தங்கி இருக்கிறேன். ஆம் அதை நான் அப்படித்தான் சொல்வேன்.
WiFi கனெக்ட் ஆன பின் Whatsapp’ல் மனைவியின் கோப வார்த்தைகள் வந்து குவியத் தொடங்கிவிட்டன. என்ன செய்வது மூன்று நாட்களாக சரியாகப் பேச முடியவில்லை. மொத்த கோபத்தையும் angry smile’யாக போட்டு 100 மெசேஜ் அனுப்பி இருக்கிறாள். மொத்த வாழ்க்கையையும் பிறருக்காக அர்ப்பணித்தும் யாரையும் திருப்தி படுத்த முடியவில்லை. என்ன வாழ்க்கையோ..லேசாக தலையில் அடித்துக் கொண்டேன்.
புலம்பிக் கொண்டே புறாக் கூண்டுக்குள் வந்து விட்டேன். இந்தக் கூண்டில் என்னோடு இன்னொருவரும் இருக்கிறார். உடனே ஜோடி என்று நினைத்துவிடாதீர்கள். அவன் எனது ரூம் பார்ட்னர். புறாக் கூண்டுக்கு பார்ட்னர் வேறு.
அவன் ஒரு இந்திக்காரன். அவனுக்கும் எனக்குமான உரையாடல் பெரும்பாலும் லேசான ஒரு புன்னகை மட்டும் தான். கதவைத் திறந்தால் ஒரே இருட்டாக இருந்தது. தூங்கி விட்டானோ என்று பார்த்தேன். இல்லை டிவியிலே சேனலை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதுதான் பொழுதுபோக்கு.
இப்போது நான் லைட்டை தட்டினால் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வான். எதுக்கு வம்பு என்று அந்த டிவியின் ஒளியிலேயே ஆடைகளை மாற்றி கைலியை கட்டிக்கொண்டு ஒரு பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டு எனது கட்டிலில் வந்து படுத்தேன்.
படுத்த உடன் எப்போதும் போல் சிந்தனைகள் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது. நாம் படுத்து விட்டோம் என்பது இந்த சிந்தனைகளுக்கு எப்படி தான் தெரிகிறதோ..?
ஊரில் சம்பாதிக்கத் துப்பில்லாதவன், பேராசைக்காரன் என்றெல்லாம் சிலர் என்னை சொல்வதுண்டு. அது சரியாக கூட இருக்கலாம். வாழ்வின் கஷ்டங்களைக் குறைக்க இங்கு வந்து நிம்மதியை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதும் எனக்கும் புரிகிறது. ஆனால் என்ன செய்வது ஆடம்பரங்கள் அத்தியாவசியமாகி ரொம்ப நாள் ஆகிவிட்டதே. அதற்கு சமுதாயத்தையோ, குடும்பத்தையோ, வீட்டுப் பெண்களையோ குற்றம் சொல்லி எப்போதும் நான் தப்பித்துக் கொள்கிறேன். அப்படி தப்பித்து தப்பித்து செல்வதினாலேயே தீர்வு கிடைத்தபாடில்லை. அவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்க எனக்கு நேரமும் இல்லை. ஒரு நாள் விடுமுறையும் தூங்கி எழுந்தால் பறந்து விடுகிறது. “நேரம்” அது அப்படித்தான் ஓடுகிறது. இப்போதுகூட பாருங்கள் இப்போதுதான் படுத்தேன் அதற்குள் மணி 12 ஆகிவிட்டது.
சரி நாளை எல்லாம் சரியாகும் என்று கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டேன். பிறகு தூங்குவதாக என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.
– சே.ச.அனீஃப் முஸ்லிமின்
நன்றி : கீற்று இணையம்