என் குடும்பத்தில் அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, மாமா, அம்மம்மா. முத்து ஆகிய நான் குடும்பத்தில் சிறியவன். கடைக்குட்டி பயல் ஒன்பதாம் வகுப்பில் படித்த காலம் அது. ஐம்பதில் சிவாஜி கணேசன் முதலில் நடித்த பராசக்தி படம் வந்திருந்த காலம். அந்த படத்தை என் இரு நண்பர்கள் பார்த்து விட்டு அதில் வந்த வசனங்களை திருப்பித் திருப்பி எனக்குச் சொல்லியது பாரசக்தி படம் பார்க்க என்னைத் தூண்டிற்று.
அப்போது இருந்த யாழ்ப்பாணம் வெலிங்டன் தகர சுவர்கள் உள்ள சினிமாத் தியேட்டரில் வாங்கில் இருந்து பார்க்க 1950 இல் கலரி 55 சதம் அது பெரிய காசு அந்தக் காலத்தில் முட்டை தேங்காய் ஒன்று ரெண்டு சதம் இப்ப அந்த இரண்டு சதம் புழக்கத்தில் இல்லை.
நான் இரண்டாம் கிலாசில் இருந்து படம் பார்ப்பது வழக்கம். அப்போது இரண்டாம் கிலாசில் கதிரையிலிருந்து பார்க்க ஒரு ரூபாய் ஐம்பத்தைந்து சதம். என் அப்பா கச்சேரியில் வேலை. அவர் மாத முடிவில் சம்பளம் கிடைத்தவுடன் எனக்கு ஒரு ரூபாய் என் மாத பாக்கெட் செலவுக்கு தருவார். அதை நம்பி வாழ்ந்தவன் நான். அந்த பணத்தில் அம்புலிமாமா என்ற சிறுவர் சஞ்சிகை, ஐஸ் கிறீம், சூசியம் கடலை, கொய்யா பழம் போன்ற நொட்டு தீன்கள் வாங்குவேன். சில சமயம் அம்மம்மாவுக்குச் சுருட்டு வாங்கி வந்து கொடுத்தால் பத்து சதம் தருவாள். அது மாதம் மூன்று தடவைகள் அவளிடம் இருந்து எனக்கு வரும் வருமானம்.
****
“அப்பா எனக்கு இரண்டு ரூபாய் தர முடியுமா?” பராசக்தி படம் பார்க்க இரண்டாம் கிளாஸ் செலவோடு கடலை ஆரஞ்சு பார்லி செலவையும் சேர்த்துக் கேட்டேன்.
“அக்காவைப் போய் காசு கேள். அவ வைச்கிருப்பா”அப்பாவின் பதில் வந்தது
டீச்சராக வேலை செய்யும் என் அக்காவிடம் போய் கெஞ்சிக் இரண்டு ரூபாய் கேட்டேன்.
“முத்து எனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை. என்னிடம் காசு இல்லை. நீ போய் அண்ணாவைக் கேள் அவன் தருவான்” அக்கா பதில் சொன்னாள்.
வங்கியில் வேலை செய்யும் என் அண்ணாவிடம் போய் இரண்டு ரூபாய் காசு கேட்டேன்.
“எனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை. என் சைக்கிள் ரிப்பேர் செலவு வேறு இருக்கு. அம்மம்மாவை போய் கேள்.” அண்ணாப்பதில் சொல்லிவிட்டு நிற்காமல் போய் விட்டான்.
என் அம்மம்மா, படு சிக்கனக்காரி. அவளுக்குக் கிடைப்பதோ என்பாட்டா இறந்த பின் வருகிற சிறு தொகை பென்சன். அவர் இறந்து ஆறு வருஷம்.. கிடைக்கிற பென்சன் அவளின் மருந்து, டாக்டர் செலவுக்கு சரி. அதிலை கோவிலுக்கும், சுருட்டுக்கும் வெற்றிலை பாக்குக்கும் காசு தேவை. எதற்கும் அவளைக் கேட்டுப் பார்ப்போம் என்று அவளிடம் போய் இரண்டு ரூபாய் கேட்டேன்.
“ஐயோ ராசா எனக்கு பென்சன் இன்னும் வரவில்லை சுருட்டு வாங்க மட்டும் காசு வைச்சிருக்கிறன். என்னிடம் இரண்டு ரூபா இல்லை. உண்டை மாமாவிடம் போய் கேள் அவர் தருவார்” அம்மம்மா பதில் சொன்னாள்.
அம்மாவிடம் போய் இரண்டு ரூபாய் கேட்டேன்.
நான் பில்கள் கட்டவேண்டும். பால்காரன் பேப்பர் காரன், கக்கூஸ் காரனுக்கு காசு கொடுக்க வேண்டும் எலெக்ட்ரிக் பில், வீட்டு வாடகை கட்ட வேண்டும் என்று அம்மாவிடம் இருந்து பதில் வரலாம் என்று எதிர்பார்த்தேன்
“அதுசரி உனக்கு இப்ப எதுக்கு இரண்டு ரூபாய்?” அவள் கேட்டாள் .நான் காரணம் சொன்னேன்
நான் அங்கும் இங்கும் இரண்டு ரூபாய் கேட்டு அலைவதைப் பாரத்துக் கொண்டு இருந்த என் அம்மாவுக்கு என் மேல் அனுதாபம் வந்தது
ஐம்பது வருடங்களுக்கு முன் என் பாட்டா அவளுக்கு வாங்கி கொடுத்த தகர டிரங்குப் பெட்டியை, தன் மடியில் இருந்த சாவியை எடுத்து அவள் திறந்தாள். டிரங்குப் பெட்டிக்குள் சாவி போட்ட ஒரு பெட்டி.. அதை வேறு சாவி போட்டுத் திறந்தாள். அதுக்குள் சிறு கொட்டைப்பெட்டி. அதுக்குள் அவள் மடித்து வைத்திருந்த காசில் என்னிடம் ஒரு புது இரண்டு ரூபாய் நோட்டு ஒன்றை எனக்குத் தந்தாள். .என்னால் நம்ப முடியவில்லை. அவளைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தேன்.
அம்மாவின் முகம் மலர்ந்தது . அது தான் தாய்ப் பாசம்.
நிறைவு..
– பொன் குலேந்திரன் (மிசிசாகா, ஒன்றாரியோ, கனடா)