முற்றத்தைக் கூட்டுகையில்
“கூட்டாதே தாடா” என்கிறார்
தேங்காய் உரிக்கையில்
“இஞ்ச கொண்டாடா” என்கிறார்
எந்தன் வியர்வைத் துளிகளைக் கூட
உதிரச் சிதறலாய் எண்ணிச் சொன்னாரோ என்ன!
இப்பிடித்தான் கடினச் சொற்களைக் கடிவாளமிட்டு அக்கணம் அகல்கிறார்.
என் நெஞ்சு கூட்டப்பட்டதையும்
தவிப்புக்கள் உரிக்கப்பட்டதையும் உணர்கிறேன்
முற்றத்தாலும் தேங்காயலும் எழுதிக் காட்டுகிறார் பாசக் கவிதைகளை
அப்பா தப்பா சொன்னாலும்
அப்பாவின் சொல்லில் உப்புக் கூடினாலும்
அப்பா கரிசனை கொள்ளாது விடினும்
அப்பா அப்பாதான்
மகன் நடந்து செல்கையில்
பின்னிருந்து ரசிக்கும் அப்பாவின் கண்களில் ஆயிரம் அம்மாக்களும்
முடிகொட்டா மிடுக்குடன் அப்பா நிமிர்ந்து செல்கையில்
நானும் முதுமையிலும் இப்பிடித்தான் அப்பாபோல் இளமையாய் இனிப்பேன் எனும் மகனின் நெஞ்சிலும்
ஆயிரந் தாமரைகள் மொட்டவிழ்க்கின்றன.
அப்பா சேறாக இருப்பினும்
எம்மை செங்கமல மாக்குபவர்
அப்பா வில்லனாக இருப்பினும்
எம்மை வில்லாளனாக்குபவர்
அப்பா சோதியாய்ச் சுடரினும்
எம்மை சொல்லாளனாக்குபவர்
அப்பா எரிகல்லாய் எரிக்கினும்
எம்மை ரிசிமாந்தனாக்குபவர்
அப்பா திமிரின் அழகிய கர்வம்
அப்பா மிடுக்கின் அழகிய மித்திரன்
அப்பா அதிகாரத்தின் அழகிய அன்பன்
அப்பா அன்னையின் ஆத்ம காவலன்
அப்பா ஆச்சரியத்தின் அசுரக் குறி
அப்பா கோபத்திலும் விட்டகலா சாமி
அப்பா ஒரு மலரல்ல
அப்பா ஒரு முள்ளல்ல
அப்பா ஒரு பூபாளமல்ல
அப்பா ஒரு முகாரி அல்ல
எப்பா எல்லாமாக என்னுள் இருக்கையில்
அப்பாவின் கோப்பையில்
அம்மா இருக்காமலா போவாள்
த.செல்வா
நேரம் காலை 10.10.
கரணவாய்