கவிதை | காற்றே நீ வீசு…| மாயன்கவிதை | காற்றே நீ வீசு…| மாயன்

காற்று மாறிப் போயிற்று

மேற்கிருந்து மேலெழுந்து-காற்று

கிழக்கிருக்கும் அனைத்தையும் மோதும் – அது

கச்சான் காற்றாம்…

 

கச்சான்

கடலில் மோதக்

கடலோ ஆர்ப்பரிக்கும்…

அமைதியாய் தூங்கும்

அதன் அங்கங்கள் உசும்பும்

மெதுவாய் அலை கிளப்பும்…

 

அலைகள்

வரியாகும்…  இடையே

வெண்நிறங்கள் பூக்கும்

 

அலை மோகங் கொண்டோடிக் – கரை

மண் மீது மோதும் – இளமண்

காதல் கொண்டு

அலையிற் கரையும்

முதிர் மண்ணோ – மோதலாற்

சினங்கொள்ளும் – துகளாய்

மேலெழும் –

கச்சான் அத்துகளை –என்

கண்மீது விசிறும்

 

ஐவிரல் கோர்த்து

முகம் மூடி நாணங்கொள்வேன்

நான்

 

ஏய் கச்சான் காற்றே

நீ வீசு…

 

அன்றும்

அவன் அருகிருக்க

நீ செய்த

சில்மிசத்தால்-என்

கண்ணில் விழுந்தன முதிர் துகள்கள்

ஊதி வெளித்தள்ள – அவன் இதழ் கூம்பி

அருகில் வந்தான்

நாணங்கொண்டேன் நான்

 

ஐவிரல் மூடி

முகம் மறைத்து….

 

இன்று அவனில்லை அருகில்…

வேற்றான் ஊரேக – வேல்

ஏந்திக் காவல் நின்றான் – பின்னர்

போராடி வீழ்ந்தான்

 

நான் – மறத்தி

கூலிக்கு மண் சுமந்தென்

குடும்பங் காக்கிறேன்

 

காற்றே நீ வீசு

கண்ணில் துகள் வீழ்த்து – நான்

ஐவிரல் மூடி முகம் மறைப்பேன்

அப்போதென் அருகில் – வருவான் அவன்

துகள் ஊதி வெளித்தள்ள

இதழ் கூம்பி…. அருகில்….

 

கதகதப்பாக்கும் அவன் சுவாசமறியக்

காற்றே…… நீ வீசு

 

வீசு – காற்றே

நீ வீசு….

 

– மாயன் – 

ஆசிரியர்