செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிதை | மீளக் குடியமர்வு | மாயன் கவிதை | மீளக் குடியமர்வு | மாயன்

கவிதை | மீளக் குடியமர்வு | மாயன் கவிதை | மீளக் குடியமர்வு | மாயன்

3 minutes read

விரல்கள் தோற்றுப் போகும்

 

ஒரு நாளின்

மணித்தியாலங்களைக்

கணக்கிட முடியாக்

கணத்தில்

 

கை விரல்களின் குறைவு

முகமறையும்

 

புத்தி

கால் விரல்களைச்

சேர்த்தெண்ணிப்

பின்னும்

 

தோற்றுப் போகும் . . .

 

எஞ்சிக் கிடக்கும்

நான்கு மணி நேரங்கள்.

 

ஒரு நாளை

வெல்லவே முடியாது . . .

 

விரல்களால் . . .

கைகளால் . . .

கால்களால்.. .. ..

 

மட்டுமா?

 

வயிற்றால்வெறும்

வயிற்றால் . . . .

 

எனதும் . . .

குழந்தையினதும்

வயிற்றால்?

 

எம்

நாட்கள் வெல்லப்

படாமலே போயிற்று

 

மெல்ல வயிற்றில்

பரவும் வலிதேக

மெங்குமோடி பின்

மூளை வரும் . . .

குழந்தையோ . . .

பெருங்குரலில் ஆரம்பித்தழுதுப்

–   பின்

அனுங்கும் . . .

 

வாய் சப்பும் . . . .

 

தசையின்றிப்பால்

வற்றித் துருத்திக்

கிடக்கும்முளைக் காம்பை

 

அவள் வாய்க்குள்

திணித்துத் தோற்றுப்

போவேன்நான்

 

உடல் சிதறிக் கிடந்த

இருபது பேரின் நடுவே

என்னவனைத் தேடித்

தோற்றுப் போன

நாள் முதல் . . .

 

பெயரறியா இடம்

நோக்கிப் பெயர்ந்ததும்.

பசி பழகிப் பல நாட்கள்

பட்டினியாய்

கிடந்ததும் . . .

 

மீட்போரைத் தாண்டி

முட்வேலிக்கம்பிக்குள் . . .

அவள் பிறந்ததும்

 

மீள . . . இரு வருடம்

தாண்டி ஊர் திரும்பி

 

உடைந்தழிந்த

என் வீட்டின்

எச்சங்களில்

 

பச்சை ஓலைக்

கூரையிட்டு

படுத்த போது . . .

 

பசி

 

ஓங்கியறையுது . . .

ஓலமிடுகுது . .

 

இரவொன்றில்

மரத்துப் போன மனத்துடனும்,

பசித்துப் போன வயிற்றுடனும்

பற்றையொன்றிலொதுங்கிச்

சில

பணத்தாள்கள் பார்த்த பின்

தான்

பசியடங்கிப் போயிற்று

 

உனக்கும் , எனக்கும் . . . அவனுக்கும்  கூட

 

இச் சமூகத்தின் அகராதியில்

எனைக் குறிக்கும் பெயர்

என்ன? . . . வேசையா? . . .

 

வைத்துக் கொள்

 

பறவாயில்லை

 

பசித்தழாது . . . என்

குழந்தையாவது

இருக்கட்டும் . .  

 

மாயன் – 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More