கவிதை | கொல்லாமை | காந்தி கவிதை | கொல்லாமை | காந்தி

கொல்லானை எல்லா உயிரும் தொழும்

புலால் உண்ணானை எல்லா உயிரும் தொழும்

என்று சொல்லிவைத்தான் வள்ளுவனும்.

கொல்லுதல் கூடாதென்று சமணரும் சொன்னார் அன்று.

 

அரசும் வேண்டாம் சொந்த உறவும் வேண்டாம்

பொருளும் வேண்டாம் நவ மணிகளும் வேண்டாம்

உயிரும் நிலையில்லை, இளமையும் நிலையில்லை

உண்மைப்பொருள் நாடிப் புறப்பட்டான் கெளதமனும்

 

போதி மரநிழலில் பொருளறிந்து புத்தரானான்

வதைகள் வேண்டாம் என்றான், உயிர்கள் சமம் என்றான்

அன்பே தெய்வம் அதுவே வேதம் என்றான் .

போதனைகள் கேட்ட மக்கள் புத்தரின் பின் சென்றார்.

 

கொன்றதனால் தின்றோம் என்றார் பலர்

தின்றதனால் கொன்றோமென்றார் சிலர்

கொன்றால் பாவம் தின்றால் போகும்

என்று சொன்னார் சில மூடர்.

 

பசுவதை வேண்டாம், உயிர் வதை வேண்டாம்

புத்தரின் வழிவந்த பிக்குகள் கூறுகின்றார்

இந்நாடு பௌத்தருக்கே, அதனால் நீ

தமிழரைக் கொன்றுவிடு அதுவொன்றும் பாவமில்லை.

 

– காந்தி –

ஆசிரியர்