கவிதை | பட்டமரம் | முல்லைஅமுதன்கவிதை | பட்டமரம் | முல்லைஅமுதன்

 

காய்த்த மரம்

கல்லடிபட்டு நின்றது.

வளவுப் பொடியள்

எறிகின்ற கல்லால்

அடிக்கடி

காயப்பட்டுப்போன பொழுதில்

காற்று

நானிருக்கிறேன்

என்று கொஞ்சிப்போனது..

பறவைகளும்

கிளையில்

குந்தியிருந்தபடி

சில்மிஷம் செய்ய

மனது

காதல் கொண்டது..

 

நட்ட இடத்திலேயே

ஏன்

நிற்கும்படி

இறைவன் வைத்தான்?

எனி

காய்க்காது..

காதல் கொள்ள

முடியாது

என

வெறுப்பாய்

மனிதர்களுடன்,

பறவைகளும்..

 

கிட்டி அடிக்கலாம் என

பொடியளும்

கிளை ஒடித்துச் சென்றனர்..

குளிருக்கு

ஒளியவென

கூடுகட்டிய

குருவிகளைக்

கலைத்தன

‘கெட்டிபோல்’

ஒன்றின் கல்பட்டு..

மழை வெள்ளம்

அடைக்கவென

மண் அள்ளிச் சென்றனர்..

 

விறகுக்கும்

உதவாது என பேரம்

பேசியவர்

‘அறா’விலைக்கு

அறுத்துசென்றார்..

நான் குந்தியிருந்த

நிலத்தோடு

பெயர்த்தபின்..

மண்ணும்

சொந்தமில்லையாம்…

 

வாரிசாய் ஒன்றும்

வாய்க்காத

இந்த பட்டமரம்

இங்கிருப்பது

நல்லதல்ல என

உரிமை

பாராட்டியவர்களே

விலகிப்போனார்கள்.

சொந்தம்

கொண்டாடிய

குருவிகளும் மறந்து போயின..

நான் நின்ற இடம்

இன்னொரு

வாழ்க்கை வாழ ஏதாவது அமையலாம்..

புதையுண்டு போன

கனவுகளுடன்

பயணித்தது பட்டமரம்…

 

– முல்லைஅமுதன் – 

 

ஆசிரியர்