அதே வழியில்
வந்தவனிடம்
விசாரித்தேன்.
சொன்னார்.
நான் ஒவ்வொன்றாய்
கிடுகெடுது
பின்னிச் சேர்த்த
படலையைக் காணோம்..
முற்றத்தில்
ஏறிவிளையாடிய
நாவல்மரம்
அடையாளமின்றி வெட்டப்பட்டிருந்தது.
நாவூறச் சுவைத்த பலாமரம்
காய்ப்பதில்லையாம்.
படலை திறந்து
வருகையில்
‘அம்மா’ என்று
கத்தும் மாடு..
அடிக்கடி
காலைச்சுற்ரும்
நன்றியுள்ள ஜிம்மி..
குளிக்கையில்
உடைந்த கண்ணாடித் துண்டில்
தெரியும்
என் முகத்தைச் சவரம்
செய்யும் இடமே காணாமல்
போயிருந்தது,
காலாற
நடது திரிந்த வரப்போரம்..
விழுந்த, விழுந்த் பின்
எழுந்து ஓடப் பழகிய பழஞ்சைக்கிள்…
எல்லாம்
மாறியிருந்தது..
திரும்பித் திரும்பி
பார்க்கிறேன்..
வளைந்து உரமேறிய
அந்த மரம்…
அப்படியே
இருந்தது
நான் தற்கொலை
செய்த இடம்…
– முல்லை அமுதன் –