கவிதை | வரலாற்றுத் தவறு | முல்லை அமுதன்கவிதை | வரலாற்றுத் தவறு | முல்லை அமுதன்

frd

அன்பைப்
போதித்தாய்!
அப்பாவிடமிருந்து
அறிவைப்
பெற்றுத் தந்தாய்!!
கருணை,காருண்யம்
பற்றியெல்லாம்
அக்காள் மூலம்
சொல்லவைத்தாய்.
சண்டைகள் வேண்டாம்
அகிம்சையே போதும்
என் அண்ணன் சொல்ல
நீயும் மகிழ்ந்தாய்..
மனிதனாய் இரு என்றாய்.-
நேர்மைதான் மனிதனின்
அச்சாணி
என்றும் சொன்னாய்.
எதையோ சொல்லாமல்
போனதாய் இப்போது
உணர்கிறேன்.
குழிபறிக்கும்
நண்பர் கூட்டம்
பற்றி சொல்லவேயில்லை.
கத்தியுடனும்,
கயமை உணர்வுகளுடனும்
வலம் வரும் எதிரிகளிடம்
எச்சரிக்கையாக இரு
எந்த ஆசானும்
சொல்லவேயில்லை.
சொல்லியிருக்கலாம்.
சொல்லாமல் விட்டதும்
நீ-
படித்த வரலாற்றுத் தவறோ?
உனக்கென்ன
உயர
படமாய்த் தொங்கிகொண்டாய்..
கருனைக்கொலை
செய்ய எந்த மருத்துவம்
கற்றுத் தந்தது?
சொல்லியிருக்கலாம்..
சொல்லாமல்
விட்டுச் சென்றுவிட்டாய்..
நண்பனைப்
புரியாதபடியும்,
எதிரியை இன்னும்
அடையாளம் காணமுடியாதபடியும்
அதே
வரலாற்றுத் தவறு
கற்றுத் தந்திருக்கிறது.
மன்னித்துவிடு..
என் வரலாறு
சொல்ல
என் பிள்ளை பற்றி
சிந்திக்க வேண்டும் நான்..
மன்னித்துவிடு!

 

முல்லை அமுதன்

ஆசிரியர்