ஆங்கில மொழியாளுகையில் ஈழத்தின் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடந்தேறிய அகிலினி எழுதிய ‘A CITY WITHOUT WALLS’ நூல் வெளியீடு.
ஈழப்பரப்பில் புதிய படைப்பு வியூகங்கள் அவசியமாம். பிறமொழிகளுக்கும் எமது உணர்வுகள் செல்லல் வேண்டியதே. மொழிபெயர்ப்பினும் மூலவுணர்வை அதே மொழியில் ஆக்கி வழங்கல் மேலானதொன்றே.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி அகிலினி எழுதிய ‘A CITY WITHOUT WALLS’ (சுவர்களற்ற ஒரு நகரம்) ஆங்கிலக் கவிதைகள் நூலின் வெளியீட்டு விழாவானது 27.08.2019 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.30 மணிக்கு, ஈழத்தின் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் குவிமாடத்தில் ஆரம்பமானது. நிகழ்விற்கு ஊடகவியலாளர் துளசி முத்துலிங்கம் தலைமை வகித்தார். நிகழ்வின் மொழிவழக்கு யாவுமே ஆங்கில மொழி பயன்படுத்துகையில் நடைபெற்றன. மங்களச் சுடர்கள் ஏற்றப்பட்டு மெளன இறைவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து வரவேற்புரையினை நூலாசிரியர் அகிலினியின் தாயார் ரஞ்சுதமலர் வழங்கினார். ஆசியுரையினை எழுத்தாளர் அருட்பணி அன்புராசா(அ.ம.தி) அடிகளார் வழங்கினார். தலைமை உரையினைத் தொடர்ந்து பெண் படைப்பாளி வெற்றிச்செல்வி வெளியீட்டுரை நிகழ்த்தினார்.
நூலினை அகிலினியின் பெற்றோர் நந்தகுமார் ரஞ்சுதமலர் இணையர் வெளியிட, முதற்பிரதியினை ‘இயற்கை வழி இயக்கம்’ அமைப்பினைச் சேர்ந்த குலசிங்கம் வசீகரன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர மேயர் ஆர்னோல்ட் பிரதி பெற்றார். தொடர்ந்து பங்கேற்பாளர்கள் நூலினைப் பெற்றனர். நூல் ஆய்வுரைகளை இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களும் சமூகச் செயற்பாட்டாளரும், இலங்கை வங்கியின் ஊர்காவற்றுறை கிளை முகாமையாளருமான ரேனோல்ட் எட்வேர்ட் அவர்களும் ஆற்றினார்.
ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை ‘A CITY WITHOUT WALLS’ நூலின் ஆசிரியர் அகிலினி வழங்கினார். பிறமொழியில் 17 வயதை மாத்திரம் கொண்ட ஈழத்து மாணவி ஒருவர் படைத்த இந்நூலானது ஈழப்படைப்புலகின் இன்னுமொரு ஏற்றம் ஆகும். இவரை வணக்கம் லண்டன் வாழ்த்துகிறது.