தான் விட்டுச்சென்ற கலைப் படைப்புக்களாளும் தேடி வைத்த உறவுகளாலும் கலைஞன் வாழ்வான்.
சிறிய வயதில் கற்கும் பொழுதினில் ‘செய்வன திருந்த செய்’ என்கிற வாசகத்தினை கற்றறிந்ததொன்று. செயலை செய்ய முற்படும் பொழுது வரும் சில நடைமுறை சிக்கல்களால் அவை சிதைந்து போவதுமுண்டு. அப்படி சிதையாமல் கவனமாக அவற்றை ஒழுங்கு படுத்தி நடத்தவேண்டும் என்பதில் மிக்க கரிசனையுடன் இருந்தவர் அல்லது மற்றவர்களை இருக்க செய்பவர் ஓவியர் கருணா அவர்கள்.
அவருக்கான நினைவுப் பகிர்வும் ‘வண்ணம் கொண்ட வாழ்வு’ எனும் நூல் வெளியீடும் 23/02/2020 அன்று நடைபெற்றது.
கலைஞர் கருணா அவர்களின் முதலாமாண்டு நினைவும் ஓவிய ட்ரொஸ்கி மருது அவர்களால் தொகுக்கப்பட்ட ‘வண்ணம் கொண்ட வாழ்வு’ நூல் வெளியீடும் ஸ்கேர்போறோ நகரில் இடம்பெற்றது. கலைஞர் கருணா அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் சேர்ந்து ஒழுங்கு செய்திருந்த இந் நிகழ்வினை மூத்த கலைஞர் பி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். நிகழ்வில் கருணா அவர்களின் மருமகள் சிந்தியா ஜீவகுமார் அவர்கள் தனது மாமனாருடன் இருந்த அன்புப் பற்றி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இளம் ஒளிபரப்பாளர் தாமரை அவர்கள் கலைஞர் கருணா மீது இருந்த மதிப்பையும் எங்களது கலைப் படைப்புகளை ஆவணப்படுத்தப்பட்டு தங்களைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு பகிரப்படவேண்டிய முக்கியத்துவம் பற்றியும் உரையாற்றினார். உலகம் முழுதும் பரந்து வாழும் கருணா அவர்களின் இலக்கிய நண்பர்கள் கலைஞருடனான தங்களது தங்களது அனுபவங்களை காணொளி வாயிலாக பகிர்ந்து கொண்டனர்.
கருணா அவர்களின் ‘காத்திருப்பு’ எனும் கவிதையினை தமிஷா, வேனிலா ஆகிய இரண்டு சிறார்கள் கவிமொழிவாக உணர்வு பூர்வமாக அங்கே காட்சிப் படுத்தியிருந்தனர்.
தமிழ் ஓவியர்களின் மிகவும் முக்கியமானவரும் எமது பாரம்பரியங்கள் வரலாறு போன்றவற்றை தனது ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்துபவருமாகிய ஓவியர் மருது அவர்கள் நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றினார். அவரது உரையில் கருணா அவர்களது ஓவிய வடிவம், மரபு, அவரது ஓவியக் குருநாதனாரா அ.மாற்கு பற்றியும் விரிவான உரையினை நிகழ்த்தினார்.
கருணாவின் பல பண்புகள் பற்றி மிகவும் உணர்வுபூர்வமான பதிவொன்றினை அவரின் மைத்துனன் சபையோருடன் பகிர்ந்து கொண்டார். இறுதியில், கருணா அவர்கள் நண்பர்கள் சார்பாக தாய்வீடு பத்திரிகையின் ஆசிரியர் டிலீப்குமார் அவர்கள் கருணாவுக்கு தனக்குமான தொடர்பையும் அவர் இன்மையால் உள்ள வெற்றிடத்தை பற்றியும் உரையாற்றினார். வண்ணம் கொண்ட வாழ்வு நூலின் பிரதிகள் அவரது சகோதரி கருணாகரி அவர்களால் சபையோருக்கு வழங்கப்பட்டது
கனடாவிலிருந்து சேகர் விஜயராஜா