கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரான அளவில் மூச்சு விடுவது முக்கியம். கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும். கர்ப்பிணிகள் தொடர்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தால் குழந்தை தாய் ஆரோக்கியம் காக்கப்படும். நான்கு எளிதான மூச்சு பயிற்சிகளை பார்க்கலாம்.
விரிப்பில் கால்களை மடக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு தாடை, தோள்கள், இடுப்பை ரிலாக்ஸ் செய்துவிட்டு ஒரு கையை வயிற்றில் வைத்துவிட்டு மறுகையை அதன்மேல் வைத்துக்கொள்ளுங்கள். பின் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து விடுங்கள். அந்த நிலையில் வயிறு முழுவதும் மூச்சு பரவும் வகையில் 1 முதல் 8 வரை எண்ணுங்கள். பின்னர் மெதுவாக மூச்சை வெளியில் எடுத்துவிடுங்கள். இதை மீண்டும் மீண்டும் செய்யவும். இந்த பயிற்சியை தினமும் பத்து நிமிடங்களுக்கு செய்யவும்.
பாதங்களை இணைத்து வைத்துக்கொண்டு நேராக நிற்கவும். வாயை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக இழுத்து 10 வரை எண்ணவும். அப்போது கைகளை அழுத்தம் கொடுக்காமல் மார்பில் வைத்துக்கொள்ளுங்கள் நுரையீரல் விரிவடைவதை உணரமுடியும். சில நொடிகள் மூச்சை இழுத்து கொண்டிருந்துவிட்டு மெதுவாக மூச்சை வெளியே விட்டு 10 வரை எண்ணவும். இதே போல் இந்தப் பயிற்சியை 10 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 7வது மாதத்திற்கு பின் இப்பயிற்சியை செய்வது சிரமமாக இருந்தாலும் முடிந்த வரை செய்வது நல்லது.
மல்லாக்க கீழே படுத்துக்கொண்டு வாயை நன்றாக திறந்து மூச்சை வேகமாக இழுத்து விழுங்க வேண்டும். இதை தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்தால் நுரையீரலுக்கு நல்லது. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆக்ஸிஜன் சீராக கிடைக்கும்.
உடலை ரீலாக்ஸ் செய்துவிட்டு மூச்சை நன்றாக இழுத்து நிறுத்தவும். ஒரிரு நொடிகள் கழித்து அதேபோல் உட்கொண்ட காற்றை மெதுவாக வெளியேற்றவும். பின் வாயை திறந்து காற்றை இழுத்து விழுங்கி 5 வரை எண்ணவும்.
பின் வாயை மூடிக்கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து விடவேண்டும். ஒரே நேரத்தில் 5 முறை இந்த பயிற்சியைச் செய்யலாம். இந்த பயிற்சியை நின்று கொண்டே செய்யலாம் அல்லது வசதியாக அமர்ந்து கொண்டும் செய்யலாம்.