ஈரல், மனித உடலில் இன்றியமையாத உறுப்பு. ஜீரணம் உள்பட உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிர்வகிக்கக்கூடிய மிகப்பெரிய செயலை ஈரல் செய்கிறது.
சிறு குடலுக்கு போய் சேரும் உணவு மூலமான கொழுப்பில் இருந்து, தேவையானவற்றை பிரித்தெடுக்க, பித்த ரசம் தேவை. அது ஈரலில் இருந்துதான் கிடைக்கிறது.
கொழுப்பு, புரோட்டின், சர்க்கரை போன்றவைகளை ரத்தத்தில் போதுமான அளவு கட்டுப்படுத்தி சீராக்குவதும் ஈரலின் பணிதான். ரத்தத்தில் கலக்கும் தொற்றுகளையும், வைரஸ்களையும் வெளியேற்றவும் ஈரலின் பணி அவசியம். அதனால் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் சிறப்பாக நடைபெற வேண்டுமானால், ஈரல் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
தொடர்ச்சியாக அதிக அளவில் மது அருந்தினால், ஈரல் கெட்டுப்போகும். அதன் மூலம் உடல் முழுவதும் தளர்ந்துவிடும்.
இப்போது நிறையபேர் ஈரல் வீக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமான மதுதான் அதற்கு முக்கிய காரணம்.
ஈரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பழம், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். புரோட்டின் நிறைந்த பால், முட்டை, பயறு வகைகள் நல்லது.
ஈரல் வீக்கத்தின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
– வாந்தி, குமுட்டல், பசியின்மை.
– திடீரென்று எடை அதிகரித்தல் அல்லது அதிகமாக எடை குறைதல்.
– கண் மற்றும் சருமத்தில் மஞ்சள் நிறம் படர்தல்.
– சிறுநீர் மஞ்சள் நிறமாக தோன்றுதல்.
– ரத்தம் கலந்த கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்.
– திடீரென்று உடலில் சொறி ஏற்படுதல்.
– காலிலோ, பாதங்களிலோ வீக்கம் ஏற்படுதல்.
– தூக்கத்தில் தடை தோன்றுதல்.
– ஆண்களுக்கு தாம்பத்ய ஈர்ப்பு இல்லாமல் இருப்பது.
– பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு தோன்றுதல்.
– அடிவயிற்றில் வீக்கம் ஏற்படுதல்
– ரத்தவாந்தி எடுத்தல்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம்!