செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு நோய்!

பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு நோய்!

2 minutes read

பார்வைத்திறனை திருடும் நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது என்றும், ஆரம்ப நிலையிலேயே இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் தெரிவித்தார்.

கண்விழி விறைப்பு நோயினால் ஏற்படும் பார்வை திறன் இழப்பை முற்றிலுமாக ஒழிப்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரமாக கடைப்பிடிப்பதின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

இந்த ஆண்டு ‘‘உலகம் ஒளிமயமானது, உங்கள் பார்வையை காத்திடுங்கள்’’ என்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரத்தின் கருப்பொருளாக இருக்கிறது. அந்த வகையில் கணிவிழி விறைப்பு நோய் குறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் கூறியதாவது:-

கண்விழி விறைப்பு நோய் வராமல் தடுப்பதற்கான முன்நடவடிக்கைகள் என்று எதுவும் இல்லை. ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத கண்விழி விறைப்பு நோயினால், பார்வைத் திறன் இழப்பு வராமல் தடுப்பதற்கு ஒரே வழி, அதனை தொடக்க நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சரிசெய்வது தான். கண்ணுக்கு தெரியாமல் சத்தமின்றி பார்வைத்திறனை திருடும் இந்த நோய்க்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கண்புரை நோய் மற்றும் சிகிச்சையளிக்கப்படாத ஒளிக்கதிர் விலக்க குறைபாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவில் பார்வைத்திறன் இழப்புக்கு காரணமான நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது. இந்த நோய் அதிக சிக்கலானது மற்றும் ஆபத்தானது. கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது. கண்ணின் முன்புற பகுதிக்குள் இருக்கும் தெளிவான திரவத்தின் உற்பத்தி விகிதம் இயல்பானதாக இருக்கின்ற காலம் வரை இந்த அழுத்தமானது அதன் வெளியேறல் விகிதத்துக்கு நிகரானதாக இருக்கும். இந்த திரவத்தை எடுத்துச்செல்கிற பாதைகளில் அடைப்பு ஏற்படும்போது கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிக்கும். மேலும் மூளைக்கு தகவல்களை அனுப்பும் விழி நரம்பையும் சேதப்படுத்துகிறது.

பார்வைத்திறன் இழப்பு

எந்தவொரு வயது பிரிவில் உள்ள நபரையும் கண் விழி விறைப்பு நோய் தாக்கலாம். கண்விழி விறைப்பு நோய்க்கு சுமார் 2.3 சதவீதம் வாழ்நாள் இடர்வாய்ப்பு மக்களுக்கு இருப்பதாக அறியப்படுகிறது. குடும்பத்தில் கண்விழி விறைப்பு நோய் இருந்த வரலாறு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒளிக்கதிர் விளக்க குறைபாடுள்ள நபர்கள் மற்றும் ஸ்டெராய்டு மருந்துகள், கண் சொட்டு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் இந்த இடர்வாய்ப்புள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.

இத்தகைய நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்விழி விறைப்பு நோய் தங்களுக்கு இருக்கிறதா? என்பதற்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்விழி விறைப்பு நோய் இருப்பது கண்டறியப்படுமானால், பார்வை திறன் இழப்பை தவிர்க்க அல்லது குறைக்க தேவையான சிகிச்சைகளை பெற முடியும். இதுவரை 12 மில்லியன் நபர்களை இந்த நோய் பாதித்திருக்கிறது.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More