சமஷ்டி தீர்வை வழங்காது பிரிவினையை ஒழிக்க முடியாது: சுரேஷ் பிரேமச்சந்திரன் சமஷ்டி தீர்வை வழங்காது பிரிவினையை ஒழிக்க முடியாது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

விடுதலைப் புலிகள் கோரியது தனி தமிழீழம் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருவது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறைமையிலான ஆட்சி முறையாகும். ஆகவே தமிழர்களின் நியாயப்பூர்வமான அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு சமஷ்டி முறைமையிலான தீர்வை அரசாங்கம் வழங்காது பிரிவினை வாதத்தை ஒழிக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காது அடிமைகளாக்கி அழித்து விட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில் பலரும் அரசாங்கத்திற்குள் செயற்படுகின்றனர். இதற்காகவே மீண்டும் விடுதலைப் புலிகள் தொடர்பான பேச்சும் தனி ஈழப் பிரசாரமும் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றது. இது ஏற்புடைய விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து தெளிவுப்படுத்திய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி. கூறுகையில்,

இலங்கையில் இரண்டு மொழிகளைப் பேசும் மூன்று பிரதான இனத்தவர்கள் உள்ளனர். இதற்கு அமைவாக அனைத்து இனங்களும் திருப்திப்படக் கூடிய அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். 1950 ஆம் ஆண்டில் தந்தை செல்வநாயகம் காலத்திலிருந்தே சமஷ்டி முறையிலான தீர்வை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தனிநாடு தனி தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து போராடினார்கள்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்போ தமிழ் மக்களோ தனி நாடு கோர வில்லை. ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமையிலான சுயாட்சியினையே கேட்கின்றோம். இது பிரிவினைவாதம் அல்ல உலகத்தில் பல்வேறு நாடுகளிலும் சமஷ்டி முறையிலான ஆட்சிமுறை காணப்படுகின்றது. உதாரணமாக பல்லின மற்றும் பல மொழிகளைக் கொண்ட இந்தியாவில் மொழி வாரியான மாநில ஆட்சி காணப்படுகின்றது. அதே போன்று அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் இவ்வாறான ஆட்சி முறையே காணப்படுகின்றது.

ஆகவே பிரிவினைவாதம் முற்றாக ஒழிக்கப்படவேண்டுமாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறையிலான சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதனை தவறாக அர்த்தப்படுத்துபவர்களில் நோக்கம் தொடர்ந்தும் தமிழர்களை அடிமையாக வைத்து அழிப்பதாகும் என்றார்.

ஆசிரியர்