சிங்கள குடியேற்றத்தை அமெரிக்காவினால் தடுக்க முடியாது.சிங்கள குடியேற்றத்தை அமெரிக்காவினால் தடுக்க முடியாது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டோரும் வடக்கில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை நிறுத்துமாறு கூறியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்றது. அப்போது வாழ்ந்த தமிழர்களை மட்டுமே கொழும்பில் குடியேற்ற வேண்டும் என்ற யோசனையை மேல் மாகாணத்தில் உள்ள எந்த சிங்கள அரசியல்வாதியும் கொண்டு வரவில்லை. 83 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை காரணமாக கொழும்பில் இருந்த தமிழர்கள் கொழும்பை விட்டு செல்ல வேண்டிய நிலைமை உருவாகியது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் விடுமுறையை வழங்கி, தமது குண்டர்களை பயன்படுத்தி தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிடுவதற்காக மக்களை தூண்டி விட்டு கறுப்பு ஜூலை என்ற பாரிய அனர்த்தம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கொழும்பில் அன்று வாழ்ந்த பெருந்தொகையான மக்கள் கொழும்பை விட்டு வெளியேறினர். 83 ஆம் ஆண்டு கொழும்பில் வாழ்ந்த எண்ணிகையிலான தமிழர்களே இங்கு வாழ வேண்டும் என எந்த அரசியல் கட்சியை சேர்ந்த சிங்கள அரசியல்வாதிகளும் கூறவில்லை. எனினும் வடக்கு மாகாண சபை 80 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் பிரகாரமே வடக்கில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இருக்க வேண்டும் எனக் கூறுகின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வடக்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் அங்கிருந்த மக்கள் தொகை என்ன என்பது தெரியாது. வடக்கில் தமிழர்கள் மட்டுமே இருக்க வேண்டும் வேறு எவரையும் குடியேற்ற கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிடோரும் கூறுகின்றனர்.

சிங்களவர்களை குடியேற்றவே முடியாது. முஸ்லிம் மக்கள் இருந்த எண்ணிகையை தவிர அதிகளவில் குடியேற்ற முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். வடக்கில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படுவதை அமெரிக்கா உள்ளிட்ட எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இலங்கையில் அமைதி ஏற்படுவதை விரும்பாத பல சக்திகள் உள்ளன. இந்திய வம்சாவளியான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைக்கு வந்துள்ளார்.

அவர் எதிர்க்கட்சித் தலைவர் , அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து விட்டு வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திக்க யாழ்ப்பாணத்திற்கு சென்றார். விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தாலும் அவர் கொழும்பைச் சேர்ந்தவர். வடக்கு மக்களின் மீதான உண்மையாக கரிசனையிலா பிஸ்வால் அங்கு செல்கிறார்?. மக்கள் இன்று பேதங்களை மறந்து ஐக்கியமாக முன்னோக்கி செல்கின்றனர். அதனை சீர்குலைக்கவே இவர்கள் இங்கு வருகின்றனர். வடக்கில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கு மக்கள் துன்பத்தை அனுபவித்த போது அமெரிக்காவின் எந்தப் பிரதிநிதியும் அங்கு செல்லவில்லை என்றார்

ஆசிரியர்