திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கு பாதுகாப்பு வலயமாக பிரகடனம்!திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கு பாதுகாப்பு வலயமாக பிரகடனம்!

திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள மக்கேசர் விளையாட்டரங்கு எதிர்வரும் புதன்கிழமை வரை பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பகுதிக்கு எவரும் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டதாக திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர் லால் பெரேரா தெரிவித்தார்.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா இவ்விடத்தை நேற்று மாலை 5 மணியளவில் பார்வையிட்டதன் பின்னர் எதிர்வரும் புதன்கிழமை வரை அவ்விடத்தை பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலை,திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் அமைந்தள்ள மக்கேசர் விளையாட்டரங்கில் புனரமைப்புபணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,நேற்று முன்தினம் 12 ஆம் திகதி இரவு 8 மணியளவில் கிணறு ஒன்றினை அகழும் பணியினை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் எழும்புகளும் எச்சங்களும் தென்பட்டன.இதனை தொடர்ந்து நேற்று 12 ஆம் திகதி காலை முதல் இப்பகுதியில் அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டனர்.

இப்பகுதிக்கு பொதுமக்கள் எவரும் நேற்று மாலை 7 மணிவரை அனுமதிக்கப்படவில்லை அத்துடன் ஊடகவியலாளர்களும் அவ்விடத்திற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இப்பகுதிக்கு தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் நிலஅளவைதிணைக்களத்தினர் வைத்திய அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் எனபலர் சென்றுபார்வையிட்டதை அவதானிக்க முடிந்தது.

திருகோணமலையின் நகரசபைதலைவர் க.செல்வராஜா மற்றும் உறுப்பினர்கள் மற்றும் உப்புவெளிபிரதேச சபையின் உபதலைவர் நிசாந்தன் ஆகியோர் அவ்விடத்திற்கு வந்து பார்வையிட எத்தனித்தபோதும் அவர்களுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. இந்த விளையாட்டு அரங்கு திருகோணமலை நகரசபையின் பராமரிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்ட ஏனைய தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எவரும் மாலை வரை அவ்விடத்திற்கு சமூகமளிக்கவில்லை என்பதனையும் அவதானிக்க முடிந்ததது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா இவ்விடத்தை மாலை 5 மணியளவில் வந்து பார்வையிட்;டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிரியர்