அமெரிக்கத் தீர்மான முன்வரைவு முடிந்தது | பொறிமுறை பற்றிய விவரம் வெளியாகவில்லை அமெரிக்கத் தீர்மான முன்வரைவு முடிந்தது | பொறிமுறை பற்றிய விவரம் வெளியாகவில்லை

ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்படவிருக்கும் தீர்மான முன்வடிவத்தின் வாசகம் கடந்த வாரம் முற்றாக்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளுக்கு வழங்குவதற்கு முன்னர் சில முக்கிய நாடுகள் மத்தியில் மட்டும் பரப்புரைக்காக அது பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. தீர்மான நகல் வடிவம் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமையும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளவற்றை இந்தத் தீர்மானம் வரவேற்பதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் காணப்படும் மேலும் சில தகவல்கள்: நவிப்பிள்ளையின் மனித உரிமைகள் சபைக்கான அறிக்கை கடந்த மாதம் 27ஆம் திகதி வெளியிடப்பட்டது. அவ்வாறான ஒரு விசாரணை எவ்வாறு அமையும் என்பதுதான் இப்போது விளக்கம் இல்லாமல் இருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் சபை இவ்வாறான சந்தர்ப்பங்களில் 3 வித்தியாசமான நடைமுறைகளைக் கைக்கொள்வது வழக்கம் என்று ஜெனிவாவில் உள்ள ராஜதந்திரிகள் கூறுகிறார்கள். அவைகள் (அ) சிறப்பு அறிக்கையாளர் நியமனம் (ஆ) விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது (இ) சுயாதீன தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவது.

மனித உரிமைகள் ஆணையாளர் சபையின் 24ஆவது வருடாந்த மாநாட்டில் தமது வாய் மூலமான அறிக்கையில் துணை ஆயுதப் படைகள் குறித்து தெரிவிக்கையில், “”அவைகள் பெரும்பாலும் கலைக்கப்பட்டு விட்டன இருந்தாலும் இது வரை காலமும் இரண்டு முக்கிய துணை ஆயுதப் படைத் தலைவர்கள் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் இப்போது அமைச்சர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இவர்கள் அனைவரும் ஆயுதப் போரின்போது மிகப் பாரதூரமான குற்றங்களைப் புரிந்தவர்கள் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். கருணாவும் பிள்ளையானும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்தவர்கள். பிற்காலத்தில் அதில் இருந்து பிரிந்து கருணா பிரிவை உருவாக்கியவர்கள். இது பற்றி நல்லிணக்கக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஆயுதப் போர் மற்றும் சிறுவர்கள் தொடர்பான செயலாளர் நாயகத்தின் அறிக்கைகளிலும் கூறப்பட்டுள்ளது. போர்க்குற்றமானது சிறுவர்களைப் போரில் இணைத்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது” என்றுள்ளது.

ஆணையாளர் இராணுவ விசாரணை நீதிமன்றங்கள் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். “”அவையும் நம்பிக்கையை ஊட்டும் படியாக சுயேச்சையாக இருக்கவில்லை. இந்த நீதிமன்றங்களை நியமித்தவரான இராணுவத்தின் தளபதியானவர் போரின் முக்கிய மோதல் களத்தில் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக இருந்தவர். மேலும் முழு இராணுவத் திட்டமிடல் மற்றும் செயற்பாடுகளில் வினைத்திறனுடன் செயற்பட்டவர். இராணுவத்தால் அல்லது ஆயுதப் படைகளால் மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டதான குற்றச்சாட்டுக்களில் சிவில் அதிகார பகுதிகளினாலேயே விசாரிக்கப்பட வேண்டும், ஆயுதப் படைகள் தம்மாலேயே அது நடத்தப்படக் கூடாது” என்றும் நவிபிள்ளை தெரிவித்திருந்தார். “”உண்மையைக் கண்டறியும் எந்தவொரு பொறிமுறையும், போர்க்குற்றம், இனக்கொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மனித உரிமைகளை முழுமையாக மீறியமை, பால் நிலைக் குற்றங்கள் அடங்கலானவற்றுக்குப் பொறுப்பான குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி விசாரணையை தடுப்பது அனுமதிக்கப்படலாகாது” என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

ஆசிரியர்