கடமைக்கு கைத்துப்பாக்கியுடன் செல்லுங்கள்கடமைக்கு கைத்துப்பாக்கியுடன் செல்லுங்கள்

கடமைக்குச் செல்லும் காவல்துறை உத்தியோகத்தர்கள் கைத்துப்பாக்கியை கொண்டு செல்வது இன்றுமுதல் கட்டாயப் படுத்தப் பட்டுள்ளது. காவல்துறை மா அதிபரின் உத்தரவுக்கமைய உடனடியாக அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் என்.கே.இலங்கக்கோன், சகல காவல்துறை பொறுப்பதிகாரிகளையும் அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். காவல்துறை தலைமையகத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காவல்துறை பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், அண்மைய காலங்களில் கடமைநிமித்தம் சென்ற காவல்துறையினா் மீது பல்வேறு தாக்குதல் இடம்பெற்றிருந்தன.
இவற்றைத் தவிர்த்து காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடமைக்குச் செல்லும் காவல்துறை உத்தியோகத்தர் பிஸ்டல் அல்லது ரிவோல்வர் துப்பாக்கியை தம்முடன் எடுத்துச் செல்லவது கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நடைமுறை இருந்தபோதிலும், யுத்த காலத்தில் ரி56 ரகத் துப்பாக்கிகளுடனேயே காவல்துறையினா் கடமையில் ஈடுபட்டனர். எனினும், யுத்தம் முடிவடைந்த நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் கெளரவத்தை கருத்தில்கொண்டு மீண்டும் கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், தேவையற்ற முறையில் காவல்துறையினா் துப்பாக்கியைப் பிரயோகிக்க முடியாது. எனினும், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறை அதனை உச்ச அளவில் பயன்படுத்தும் அதிகாரம் சட்டத்தில் உள்ளது என்றும் கூறினார்.

ஆசிரியர்