பிரபாகரன் கால் பதித்த மண்கேட்டே போராட்டமாம் – இராணுவப் பேச்சாளரின் கருத்தால் பிரபலமானது செய்தி பிரபாகரன் கால் பதித்த மண்கேட்டே போராட்டமாம் – இராணுவப் பேச்சாளரின் கருத்தால் பிரபலமானது செய்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கால்பதித்து மாவீரர் நாள் உரை நிகழ்த்திய மண்ணுக்காகவே நேற்று சில தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின.   ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களிடம் காணிக்கான உறுதிப்பத்திரங்கள் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அதன்போது கிளிநொச்சியில் நேற்றுமுற்பகல் நடைபெற்ற காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதிமன்றக் கட்டமைப்பு, முகாம்கள், பயிற்சி நிலையங்கள் எனப் புலிகளின் முக்கிய நிலையங்கள் யாவும் கிளிநொச்சியில் தான் இயங்கின. அங்குதான் பிரபாகரன் நவம்பர் மாதம் மாவீரர் தின உரையை நிகழ்த்துவார்.

மேற்படி நிலப்பரப்பைக் கோரித்தான் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.    ஆனால் கிளிநொச்சி மாவட்ட மக்கள் இதில் பங்கேற்கவில்லை. சாவகச்சேரியிலிருந்து பஸ்களில் மக்கள் ஏற்றி வரப்பட்டனர். அதுவும் 42 பேரே ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மக்களுக்கு இராணுவம் நிறைய சேவைகளை வழங்கியுள்ளது. அதனால்கூட அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம். அதே வேளை, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவம் கைப்பற்றிய காணிகளை நாம் மக்களிடம் கையளித்துவருகின்றோம். கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 108 யஹக்டயர் காணியை விடுவித்துள்ளோம். காணி உறுதிப்பத்திரம் இருந்தால் மக்களின் காணியை நாம் மீளளிப்போம்.

கிளிநொச்சியிலுள்ள காணிகளுக்கு பலர் உரிமை கோருகின்றனர். ஆனால் எவரிடமும் உறுதிப்பத்திரம் இல்லை. உறுதிப்பத்திரம் இல்லாவிட்டால் காணிகளை உரியவாறு கையளிப்பது கடினமானச் செயலாகும்” என்று தெரிவித்துள்ளார்

ஆசிரியர்