அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷக் கடிதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷக் கடிதம்

அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் நியூயார்க் நகர முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு விஷம் தடவிய கடிதங்களை அனுப்பிய டிவி நடிகைக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் ஷனோன் கெஸ் ரிச்சர்ட்சன் (35). டெலிவிஷன் நடிகையான இவர், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா, நியூயார்க் நகர முன்னாள் மேயல் மைக்கேல் புளூம்பெர்க்,   சட்ட ஆலோசகர் மார்க் கிளேஸ் ஆகியோருக்கு  விஷம் தடவிய கடிதங்களை டெக்சாஸ் நகர தபால் நிலையங்களில் இருந்து அனுப்பினார். தன்னிடம் விவகரத்து கேட்ட கணவரை சிக்க வைப்பதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதற்காக தனது கணவனின் கிரெடிட் கார்டிலேயே ஆன்லைனில் விஷத்தை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் அனுப்பிய விஷம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதை நுகர்ந்தாலோ, ஊசி மூலம் உடலில் செலுத்தினாலோ உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  டெக்சாஸ் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷனோன் ரிச்சர்ட்சன்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் நியூயார்க் நகர மேயருக்கு விஷம் தடவிய கடிதங்களை அனுப்பிய ஷனோன் ரிச்சர்ட்சன், அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ஷனோன் ரிச்சர்ட்சன்னுக்கு நேற்று 18 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 கோடி அபராதமும் விதித்து அமெரிக்க மாவட்ட நீதிபதி மைக்கேல் ஸ்கெனிடர் தீர்ப்பு கூறினார்.

ஆசிரியர்