முன்னாள் முதல் பெண் பிரதமர் ஷினவத்ரா தாய்லாந்தை விட்டு வெளியேற மாட்டேன் என உறுதிமுன்னாள் முதல் பெண் பிரதமர் ஷினவத்ரா தாய்லாந்தை விட்டு வெளியேற மாட்டேன் என உறுதி

எந்த நிலையிலும் நான் தாய்லாந்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதி கூறியுள்ளார் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா. சமீபத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இவர், பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

யிங்லக் ஷினவத்ரா தாய்லாந்து நாட்டின் 28-வது பிரதமர் ஆவார். 2011-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், நாட்டின் முதல் பெண் பிரதமரும் ஆவார்.

கடந்த மே மாதம் திடீரென ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற காரணத்துக்காகப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், மானிய அரிசி வழங்கிய திட்டத்தில் நட்டம் ஏற்படக் காரணமாக இருந்த குற்றத்துக்கான‌ வழக்குகளையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும்போது அதை எதிர்த்துச் செயலாற்றாத காரணத்தின் அடிப்படையில், ஷினவத்ரா தாய்லாந்தை விட்டு வெளியேற அவருக்கு வாய்ப்பளிப்பதாக ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது

ஆனால் வெள்ளிக்கிழமை ஷினவத்ரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மற்ற தாய்லாந்துக்காரர்களைப் போலவே எனக்கு இந்த நாட்டில் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளும் சுதந்திரமும் இருக்கிறது. என்னுடைய சக தாய்லாந்து மக்களைவிட்டு நான் போகமாட்டேன்” என்று கூறியுள்ளார்.

ஆசிரியர்