இன்று முதல் 72 மணி நேர போர் நிறுத்தம் இஸ்ரேல்-ஹமாஸ்இன்று முதல் 72 மணி நேர போர் நிறுத்தம் இஸ்ரேல்-ஹமாஸ்

காஸா பகுதியில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் ஏவுகணைகள் வீசி தாக்கி வருகின்றனர்.

சண்டையை நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் சண்டை தொடங்கியது.

இரு தரப்பினருக்கிடையிலான தாக்குதலின் 23-வது நாளான கடந்த 30-ம் தேதி இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து இடம்பெயர்ந்த சுமார் மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்திருந்த ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் நாட்டின் பீரங்கிகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

முன்னறிவிப்பு இன்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இரு தரப்பினரும் தாக்குதல்களை கைவிட்டு உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதனையேற்று, இஸ்ரேல் படைகளும் ஹமாஸ் போராளிகளும் இன்று முதல் 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு சம்மதித்துள்ளனர். இந்த போர் நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு வரை அமலில் இருக்கும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி ஆகியோர் இன்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த இடைக்காலத்தை காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும், இறந்தவர்களின் பிரேதங்களை அடக்கம் செய்யவும் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என கருதப்படுகிறது.

இரு தரப்பு தாக்குதல்களில் இதுவரை 1435 பாலஸ்தீனியர்களும், 56 இஸ்ரேல் ராணுவத்தினரும் 3 இஸ்ரேலிய பொதுமக்களும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்