ஆஸ்திரேலிய பார்லிமென்டில், பர்தா அணியக் கூடாது; அது சரியல்ல,” என, அந்நாட்டின் பிரதமர், டோனி அபாட் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், பொது இடங்களில், பர்தா எனப்படும், தலையில் இருந்து கால் வரை மறைக்கும் கருப்பு ஆடையை அணிகின்றனர். அது, வேற்றுமையை பாராட்டுவது போல் அமைந்துள்ளது; அதை தடை செய்ய வேண்டும் என, அந்நாட்டின் பார்லிமென்டில், எம்.பி.,க்கள் சிலர் வலியுறுத்தினர்.
இது தொடர்பான விவாதத்தில், பிரதமர், டோனி அபாட் கூறியதாவது:குறிப்பிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பெண்கள், வெளியிடங்களில் முகத்தை காட்டக் கூடாது என நினைத்து பர்தா அணிகின்றனர். பொது இடங்களில் வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். ஆனால், பார்லிமென்ட் போன்ற பாதுகாப்பான இடங்களில் பர்தா அணிய தேவையில்லை.
கேள்விகள் எழுப்புபவர் யார் என்பதை பிறர் அறிய வேண்டும். இவர் தான் கேள்வி எழுப்பினர்; விவாதத்தில் பங்கேற்றார் என்பதை அறிய வேண்டும். எனவே, பார்லிமென்ட் போன்ற பாதுகாப்பான இடங்களில் பர்தா அணிய தேவையில்லை.இவ்வாறு, பிரதமர் அபாட் கூறினார்.
