அமைச்சரவையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவிற்கு அமைய, அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்தினருக்கு வழங்கப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கொடுப்பனவுகள், எரிபொருள் மற்றும் தொலைபேசிக் கட்டணங்களுக்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் தனிப்பட்ட நிர்வாகத்தினருக்கு வழங்கப்படும் சம்பளமும் நிறுத்தப்படவுள்ளன.
இதேவேளை, அமைச்சர்களின் பதவிகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அமைச்சுக்களின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதால், சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து அமைச்சுக்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேகர தெரிவித்துள்ளார்.