ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
நான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அவ்வாறு கலைப்பதாக இருந்தால் பெரும்பான்மை இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டமை அடிப்படை உரிமை மீறல் எனவும் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைநிறுத்தி கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி உயர்நீதிமன்றம் இடைகாலத்தடை உத்தரவு பிறப்பித்தது. எனினும், கடந்த 7 ஆம் திகதி கூடிய உயர் நீதிமன்றம் இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்காலத் தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உத்தரவிட்டது.
பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழாம் குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளது.