மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுள்ளமையினால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்லவென தற்போது கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதுடன், தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது ராஜபக்ஸவின் எதிர்த்தரப்பின் நிலைப்பாடாகும். எனினும், அவ்வாறான தேவை இல்லை என்பது மஹிந்த ராஜபக்ஸ தரப்பினரின் நிலைப்பாடாகவுள்ளது.
எதிர்க்கட்சித்த தலைவராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டவுடன், இந்த பிரச்சினை தோன்றியது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என தெரிவித்தனர்.
நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகர் கரு ஜெயசூரியாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அதே நிலையில் காணப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக செயற்படுவதற்காக மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி நீக்கப்பட்ட கீதா குமாரசிங்க தவிர்ந்த ஏனையவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.