மலேசியாவில் நடந்த மூன்று தேடுதல் வேட்டைகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேடுதல் வேட்டைகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 425 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கணிசமான இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த கைது நடவடிக்கையில் குறித்த காவல் தலைமை அதிகாரி செரி மஸ்லான் லசிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தேடுதல் வேட்டையின் போது 728 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இதில் கைது செய்யப்பட்ட 425 பேரில் 394 பேர் ஆண்களும் 31 பெண்களும் உள்ளதாக அவர், தெரிவித்துள்ளார். இவர்கள் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியன்மார், இந்தோனேசியா, பாகிஸ்தான், நேபால், பிலிப்பைன்ஸ், ஜிம்பாவே, நைஜீரியா மற்றும் உகண்டாவைச் சேர்ந்தவர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் கைது செய்யப்பட்ட 15 நைஜீரியர்களும் மற்றும் ஒரு உகாண்டா பெண்ணும், ஏழு மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என நம்பப்படுவதாக காவல்துறையின் தலைமை அதிகாரி செரி மஸ்லான் லசிம் தெரிவித்திருக்கிறார்.
இதில் முறையான ஆவணங்கள் இல்லாமை, அனுமதி காலத்தை கடந்து தங்கியிருந்தமை, அங்கீகரிக்கப்படாத அடையாள அட்டைகளை வைத்திருந்தமை உள்பட குடிவரவுச் சட்டத்தை மீறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் அனைவரும் விரைவில் நாடுகடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.