முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புத்தாண்டை முன்னிட்டு வழங்கிய செய்தியிலே, பல எதிர்பார்ப்புகளுடன் 2019ம் ஆண்டு பிறக்கின்றது. மக்கள் தமது ஜனாதிபதி, மாகாண, பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஆண்டாக இவ்வாண்டு இருக்கப்போகிறது.
அத்துடன் இலங்கை நாடானது சர்வதேசத்திற்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இதுவரையில் என்ன செய்துள்ளது என்பது பற்றி ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
2018 டிசம்பர் 31க்கு முன்னர் எமது மக்களின் காணிகளைத் திருப்பிக் கொடுக்க ஜனாதிபதியால் ஆணையிடப்பட்டிருந்தும், படையினரால் தவணை கோரப்பட்டுள்ளது. அதே போல் ஜெனீவாவிலுந் தவணை கேட்கப்படலாம்.
எமது பிரச்சினைகளைத் தாக்காட்டி, தாமதித்து, தீர்வு ஏதும் தராது, தமக்கேற்ற தீர்வுகளை எம்மேல் திணிக்க வைக்க அரசாங்கங்கள் எதிர்பார்த்திருக்கும் ஆண்டாகவும் இது அமையலாம்.
எது எவ்வாறாயினும் இந்நாட்டு மக்கள் தம்முள் ஐக்கியத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தி நிறைவுடன் பயணிக்கும் ஒரு ஆண்டாக 2019 அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்தார்.