பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மலையக அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒற்றுமையற்ற செயற்பாடு வருத்தமளிப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் அனைத்துக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும், ஒன்றிணைந்து தமது மக்களுக்கான அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா என்ற கோரிக்கையை விடுத்துள்ளனரா? என முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு நாட்கூலியாக 1000 ரூபா கிடைக்க வேண்டும் என்பதிலும் பார்க்க, யார் அதனைப் பெற்றுக்கொடுக்கப் போகிறார்கள் என்பதிலேயே தோட்டத் தொழிலாளர்களின் தலைமைகள் கண்ணும் கருத்துமாக செயற்படுவது போன்று தனக்கு தோன்றுவதாக சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போது யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் 1200 ரூபாவிற்கும் குறைவாக நாட்கூலி எடுப்பவர்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சகல கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து தமது மக்களின் நலத்தை முன்னிட்டு தோட்ட முதலாளிமார்களுடனும், அரசாங்க பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1200 ரூபாவையாவது வழங்க வேண்டும். கொடுப்பனவை செய்வதற்கு முதலாளிமாருக்கு பணம் குறைவென்றால், அரசாங்கம் தலையிட்டு நிதியுதவி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் மீது தங்களுக்கு கரிசனை இல்லை என எவருக்கும் கூற முடியாது என தெரிவித்துள்ள அவர், தேவை ஏற்படும்போது இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். மலையக தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்கத் தயாராக உள்ளதாகவும் எனினும், மலையக அரசியல்வாதிகள், இது சி.வி.விக்னேஸ்வரனுக்கு தேவையற்ற விடயம் என கூறுவார்கள் என்பதால், கருத்துக்களை வெளியிடாது மக்கள் தொடர்பில் அனுதாபத்துடன் பயணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.