இலங்கையின் வடமாகாணத்தின் நகரமான முல்லைத்தீவில், நந்திக்கடலுக்கு அருகே உள்ள கேப்பாப்பிலவு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி ஒரு விவசாயி.
அக்கிராமத்தில் ஐந்து ஏக்கர் நெற்காணி அவனின் பூர்வீகச்சொத்து வன்னி மன்னர்களில் முக்கியமானவர் பண்டாரவன்னியன். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடத்திய முதலாவது போரில், பிரிட்டிஷ் தோல்வி அடைந்தது. அந்தப் போரில் பண்டாரவன்னியன் படையில் கலந்து வீர மரணம் அடைந்த பொன்னுசாமியின் பூட்டனார், வீரசாமி குடும்பத்துக்கு மன்னன் கொடுத்த நிலம் அது.
தன் இரு மகன்மாரின் உதவியோடு கடும் உழைப்பினால் அந்த காணியில் பொன்னுசாமிக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. ஒவ்வொரு வருடமும் அருகில் இருந்த வரலாறு படைத்த வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கி படைத்தபின் வீட்டில் தன் காணியில் விளைந்த பச்சை அரிசியில் பொங்குவது அவன் வளமை. அவனின் காணியில் கரும்பும் வாழை தோட்டமும் இருந்தது.
அவன் வீட்டில் இரு பசுக்களும், மூன்று காளை மாடுகளும் அதோடு ஒரு காலிப் பண்ணையும் இருந்தது. அதில் கிடைத்த வருமானமே அவன் குடும்பம் வாழ உதவியது. அதோடு சில ஆடுகளையும் பொன்னுசாமி வளர்த்து வந்தான்.
ஈழத்து இறுதிப் போரில் பாதிப்படைந்த பல கிராமங்களில் பேப்பாப்பிலவு கிராமமும் ஒன்று. 2009 ல் முள்ளிவாய்க்கால் போரில் பொன்னுசாமி தன் மூத்த மகன் ராமசாமியை குண்டு வீச்சில் பறி கொடுத்தான். இரண்டாவது மகன் சிவசாமி ஒரு கால் முடமானான். அதோடு பொன்னுவின் ஐந்து ஏக்கர் காணியையும் வீட்டையும் இராணுவம் அபகரித்துக் கொண்டது.
பொன்னுசாமியின் காணி முழுவதும் கண்ணி வெடி என்று காரணம் சொல்லி காணியை அவனுக்கு திருப்பிக் கொடுக்க இராணுவம் மறுத்து விட்டது. இலங்கை இராணுவத்திடம் மகனையும் காணியையும் இழந்து பொன்னுசாமி தன் மனைவியோடும் முடமான இரண்டாம் மகனோடும் செட்டிகுளம் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்தான்.
பல வருட போராட்டத்துக்குப் பின் பொன்னுசாமி குடும்பத்தோடு அகதிகள் முகாமில் இருந்து வெளியே வந்து முல்லைத்தீவில் உறவினர் ஒருவர் வீட்டில் இருந்து தன் பூர்வீகக் காணியை பெறப் போராடினான். தனக்கு தன் காணி திரும்பவும் கிடைக்க அருள்புரிய வேண்டும் என்று தினமும் வற்றாப்பளை அம்மனிடம் சென்று மன்றாடுவான். மக்களின் காணியை மீட்க மக்கள் போராட்டம் மட்டுமல்ல மாணவர் போராட்டங்கள் தொடர்ந்தன.
இறுதியில் பொன்னுசாமியின் ஐந்து ஏக்கர் காணியில் அரை ஏக்கர் காணியை பிடித்துவைத்துக்கொண்டு சிதைந்த நிலையில் மிகுதி நாலரை ஏக்கர் காணியை முட்பற்றைகளோடு இராணுவம் திருப்பிக் கொடுத்தது. மிகுதி அரை ஏக்கரில் இராணுவ வீரர்களின் கல்லறைகள் இருப்பதினால் அதைத் தர முடியாது என்று இராணுவம் மறுத்து விட்டது.
தனது மன உறுதியைத் தளர விடாது பொன்னுசாமி புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு தனக்கு கிடைத்த தன் காணியை சீரமைத்து திரும்பவும் நெல் விதைத்தான். அதில் கிடைத்த முதல் அறுவடையில் புதுப்பொங்கல் பொங்கி வற்றாப்பளை அம்மனுக்கும், ஊர் வைரவருக்கும் மாவீரர்களுக்கும் படைத்து மன திருப்தி அடைந்தான். அந்தப் புது பொங்கல் தினமன்று கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் இயக்கத்தில் இருந்து மூவர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பொன்னு குடும்பத்துக்கு நிதி உதவி செய்வதாக வாக்குறுதி இயக்கம் அளித்தது. பொன்னுசாமியின் ஒரு காலை இழந்த இரண்டாவது மகன் சிவசாமிக்கு, விபத்தில் உடல் உறுப்புக்களை இளந்தவர்கள், போலியோ நோயால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்பு செயற்படாமல் போனவர்கள், கண்ணிவெடித் தாக்குதலில் உடல் உறுப்பு செயற்படாமல் போனவர்கள், கண்ணிவெடித்தாக்குதலில் உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் பயன்படுத்தக்கூடிய ஜெய்பூர் செயற்கை கால் கிடைக்க உதவி செய்வதாகவும் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் உறுதிமொழி கொடுத்தார்கள்.
அதோடு விவசாயத்தில் உழுவதற்கு இயந்திரமும் தேவையான உரமும் வாங்கிக் கொடுக்க இயக்கம் உறுதி அளித்தது. புது பொங்கலோடு பொன்னுசாமி குடும்பத்துக்கு திரும்பவும் விடிவு காலம் பிறந்தது. (யாவும் உண்மை கலந்த புனைவு)
நன்றி பொன் குலேந்திரன்