கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை இன்றைய தினம்(28) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூட்டுவாதம் காரணமாக நடக்க முடியாது சிரமப்பட்டு வந்த மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த 63 வயதான ஒருவருக்கே இச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எலும்பு முறிவு சிகிச்சை நிலையம் இன்றிய நிலையில், மன்னார் வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ உபகாரணங்களைக் கொண்டு இச்சாதனை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சினால் அண்மையில் கிளிநொச்சிக்கு நியமிக்கப்பட்ட முடநீங்க சத்திரசிகிச்சையியல் நிபுணர் மருத்துவர் எஸ். சசிகரன் தலைமையிலான சத்திரசிகிச்சை குழுவினர் மூத்த மயக்கமருந்தியல் மருத்துவர் பா. நாகேஸ்வரன் உட்பட மருத்துவர்கள், தாதியர்கள், தொழினுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட அணியினர் இணைந்து இந்தச் சாதனையை புரிந்துள்ளனர்.