“நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் திருப்திகரமான நிலைக்கு எந்தவொரு தென்னிலங்கைக் கட்சியும் எழுத்துமூலமான வாக்குறுதி தராது விட்டால் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கவேண்டிய நிலைமை வரலாம்.” இவ்வாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியைத்தான் ஆதரிக்கும் என்று சிலர் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடும். அதன் பின்னர் கட்சி ஒன்றுகூடி தீர்மானம் எடுக்கும். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாஸவில் கூட பல குறைபாடுகள் உள்ளன. வடக்கு, கிழக்குத் தமிழர்களின் நிலங்கள் அடாத்தாக அபகரிக்கப்படும் தொல்பொருள் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சு அவரிடமே உள்ளது.
கடந்த காலத்திலும் சரி தற்போதைய அரசியலிலும் சரி சஜித்பிரேமதாஸ பௌத்த மேலாதிக்கவாதத்தை முன்னெடுத்து வருபவர். தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக எழுத்துமூலம் உத்தரவாதம் தரவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அவ்வாறு தமிழ்த் தரப்புக்கு எழுத்து மூலம் தரும் உத்தரவாதத்தை தென்னிலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் பகிரங்கமாக எடுத்துக்கூறவேண்டும். இந்த விடயத்தில் தென்னிலங்கைக் கட்சிகளின் ஒருவரேனும் திருப்தியான நிலைக்கு வராவிட்டால் நாம் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டிவரலாம்.
நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தரப்பாகிய நாம் ஒதுங்கியிருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தேர்தலைப் புறக்கணித்து யார் ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஊடாக எமது பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க அழுத்தம் கொடுப்போம்” – என்றார்.