தமிழ், சிங்கள மக்களுக்கு இன்று அச்சுறுத்தலாகக் காணப்படும் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக எந்தவொரு அரசியல்வாதியும் கவனம் செலுத்துவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “இந்த நாட்டைப் பொறுத்தவரை பௌத்தத் தேரர்களுக்கு என மிகவும் முக்கியமான கடமைகள் காணப்படுகின்றன.
இன்று முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைதூக்கியுள்ளது. கடந்த 20 வருடங்களாக இந்த அடிப்படைவாதம் எவ்வாறு இடம்பெற்று வருகின்றது என்ற அனைத்துத் தகவல்களும் எம்மிடம் காணப்படுகின்றன.
ஆனால், இதுதொடர்பாக யாரும் எம்மிடம் கலந்தாலோசிக்கவில்லை. எனினும், எமது கடமையை நாம் எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இது தொடர்பாக நாம் கருத்துக்களை வெளியிட்டு எம்மீது சட்டம் பாய்ந்தாலும், அடிப்படைவாதிகள் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. அனைத்தும் அரசியலாகிவிட்டது.
இன்று முஸ்லிம் அடிப்படைவாதம் என்பது தமிழ், சிங்கள மக்களுக்கே பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகிறது. இதனையெல்லாம் எமது அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்வதில்லை.
அதேபோல், தமிழ் பிரிவினைவாதத்தின் பின்னால், இந்து மக்கள் என்றும் இருப்பதில்லை. இதன் பின்னணியில் சர்வதேசத்தின் பாரிய சதிவலையே காணப்படுகிறது. இதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையாக காணப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.