சரியான நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு வந்து சேர்ந்தார். அவருடன் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வன், தென்பகுதித் தளபதிகள் கருணா, பதுமன் ஆகியோரும் உடன்வந்தனர்.
அதில், “இன்டர்போலிடம் இந்தியா உங்களைக் கைது செய்ய வலியுறுத்தி வருகிறதே, அதில் உங்கள் நிலைப்பாடு என்ன?” என்னை ஆங்கிலத்தில் ஒருவர் கேள்வி கேட்க, புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் அதற்குப் பதிலளிக்கும் போது, `நடக்குற விஷயங்களைக் கதைக்கச் சொல்லுங்கோ’ என்று பிரபாகரன் ஆன்டன் பாலசிங்கத்திடம் சொல்கிறார். அந்த வீடியோவில் பிரபாகரன் சிரித்துக்கொண்டே பதிலளிக்கும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. தங்களுக்குப் பிடித்த பி.ஜி.எம்மில் அந்த வீடியோவை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
அந்தப் பேட்டி எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த ஒரு குட்டி ரீவைண்ட்தான் இந்தக் கட்டுரை.
1976-ம் ஆண்டு மே 5-ம் தேதிதான் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவானது. முதலில் சிறு குழுவாகத் தொடங்கப்பட்ட இயக்கம், பின்னர் படிப்படியான தங்களின் வளர்ச்சியால் மிக உயர்ந்த இடத்துக்கு வந்திருந்தனர். தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில், மிகத்தெளிவான கொள்கைக் கோட்பாடுகள், நெடுங்காலத் திட்டங்கள், சர்வதேச உறவு எனப் பரந்துபட்ட எல்லைகளைக் கொண்ட அமைப்பாக அது விரிந்திருந்தது.
2002-ம் ஆண்டில் நார்வே சமரசக் குழுவினரின் முன்னெடுப்பில், இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும், ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டன. அதன்படி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தலைநகர் கொழும்புவில் ஈழத்துக்கென்று தனி தூதரகம் கூட அப்போது இருந்ததாகச் சொல்லப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் பத்தாம் தேதி, கிளிநொச்சியில் உள்ள தூயவன் அறிவியல் கல்லூரியில் சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு அதுவரையிலும் அப்படியொரு பிரமாண்டமான சந்திப்பு நடைபெற்றதே இல்லை. இலங்கையில் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாலை 4.30 மணிக்கு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், காலை முதலே பெருவாரியான பத்திரிகையாளர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.
சரியான நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு வந்து சேர்ந்தார். அவருடன் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வன், தென்பகுதித் தளபதிகள் கருணா, பதுமன் ஆகியோரும் உடன்வந்தனர்.
அங்கு கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் பிரபாகரன் பொறுமையாகப் பதிலளித்தார். சில கேள்விகளுக்கு ஆன்டன் பாலசிங்கம் பதிலளிக்க முற்படும்போது, “பிரபாகரனை பதிலளிக்கச் சொல்லுங்கள், நாங்கள் அவரின் பதிலை எதிர்பார்க்கிறோம்” என பத்திரிகையாளர்கள் சொல்ல, என் “நண்பரின் கருத்தைத்தான் நான் பிரதிபலிக்கிறேன்” என்று ஆன்டன் பாலசிங்கம் பதிலளித்தார்.
அதே பேட்டியில் `ராஜீவ் காந்தியின் மரணம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, அது ஒரு துன்பியல் சம்பவம்’ என்று பதிலளித்திருப்பார் பிரபாகரன்.
போர் ஓய்ந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்கிற விவாதங்களும் ஒருபுறம் நடந்துவருகின்றன. ஆனாலும், பிரபாகரன் என்னும் மனிதர் தமிழர்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் மட்டும் இன்னும் மறையாமல் அப்படியே இருக்கிறது. அதற்குச் சான்றாகத்தான் கடந்த இரண்டு நாள்களாக அவர் பேசிய வீடியோ வைரலாகிக்கொண்டிருக்கிறது.
எழுதியவர் இரா.செந்தில் கரிகாலன். நன்றி விகடன்.