இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் 85% வாக்குகளைப் பெற்ற பின்னரும், பாரபட்சமின்றி நீதியை மட்டுமே எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாட்டை பிரேமதாச பாராட்டவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவ தளபதிக்கு விதித்த பயண தடை தொடர்பாக கருத்து பதிவிட்டிருந்த சஜித் பிரேமதாச, “இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத் தடை விதிக்கப்படுவது வருந்தத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியை முன்னெடுத்தவர்களில் இவரும் ஒருவர்” என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவிற்கு வெளிப்படையான ஆதரவை வழங்கியிருந்தது. இருப்பினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர் தோல்வியடைந்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக புதிய கூட்டணிக்கு சஜித் பிரேமதாச தலைமை தாங்கவுள்ள நிலையில் தற்போது இராணுவ தளபதி விவகாரம் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஒரு முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.