கொரோனவைரஸ் பரவல் தொடர்பில் உரிய சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகளை அறிதலுக்கான திறன் இருந்தால் மாத்திரமே, தடுப்பு நடவடிக்கைகள் சிறிது சிறிதாக நீக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனவைரஸ் மிகவேகமாக பரவுகிறது. அத்துடன் மிகவும் மெதுவாகவே குறைகிறது என்று உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதெனொம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் செய்தியாளர்களுடன் இடம்பெற்ற காணொளி மாநாட்டின்போது அவர் இதனை குறிப்பிட்டார்
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள் சிலவும் கொரோனவைரஸ் தடுப்புக்கான நடவடிக்கைகளை நீக்குவதற்கு ஆலோசிக்கின்றன. எனினும் அதனை கவனமாக கையாள்வது சிறந்தது என்று டெட்ரோஸ் அதெனொம் குறிப்பிட்டுள்ளார்
கொரோனோவைரஸ் கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதே திட்டங்களை மெதுவாக நீக்க வேண்டும். ஒரேயடியாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க முடியாது. சமூக இடைவெளி கட்டுப்பாடு என்பது சமன்பாட்டின் ஒரு அங்கமாகும்.
எனவே ஒவ்வொரு அரசாங்கமும் தமது பொதுமக்களின் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் சூழ்நிலையை பரிசீலனை செய்ய வேண்டும்.
கொரோனவைரஸ் பரவல் ஏற்பட்டு 110 நாட்களாகியும் விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். இதன்போது வைத்தியசாலைகள் உட்பட்ட சனத்திரள்மிக்க இடங்களில் இந்த வைரஸ் இலகுவதாக பரவும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனவைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளை சில நாடுகள் நீக்குவதற்கு முயலும் நிலையில் குறைந்த மற்றும் ஆபிரிக்காவின் நடுத்தர வருமான நாடுகள், ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் அவற்றை அறிமுகப்படுத்தலாமா என்று யோசிப்பதாகவும் உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை உயர் வருமானங்களை கொண்ட நாடுகளின் வீடுகளிலேயே தங்கியிருக்கும் கட்டுப்பாடுகள் வறுமையான அதிக சனத்தொகையை கொண்டு நாடுகளுக்கு நடைமுறைக்கு சாத்தியமாக இருக்காது என்றும் உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதெனொம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தவிர கொரோனவை கட்டுப்படுத்த பல சுகாதார நடவடிக்கைகள் அவசியம் என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.