முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று (புதன்கிழமை) காலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றது.
பொலிஸார், இராணுவத்தினர் நிகழ்வை தடுத்தபோதும் எதிர்ப்பை மீறி இந்த நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது.
இதன்படி இந்த ஆண்டும் நினைவுகூரல் நிகழ்வுகள் செம்மணி படுகொலை நினைவிடத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நிகழ்வை நிறுத்தியுள்ளதுடன். அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு பணித்துள்ளனர். எனினும் சமூக இடைவெளியை பேணி நினைவுகூரல் இடம்பெற்றது.
நாட்டில் கொரோனோ வைரஸின் தாக்கம் வேகமாகப் பரவிவரும் நிலையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.