புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தஞ்சையில் உள்ள ஈழப்போர் நினைவிடம் போல் முள்ளிவாய்க்காலிலும் நினைவிடம்: மாவை

தஞ்சையில் உள்ள ஈழப்போர் நினைவிடம் போல் முள்ளிவாய்க்காலிலும் நினைவிடம்: மாவை

3 minutes read

தமிழ்நாட்டில் தஞ்சையில் ஈழப்போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளமை போல், இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவப்பட்டு அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுவதற்கு பொருத்தமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்தள்ள அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில், வரும் 18 ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்தில் (18.18.18) தமிழின விடுதலைக்கு வித்துடல் விதைத்த மக்களுக்காக கோயில்களில், வீடுகளில் அமைதியாக விளக்கேற்றி அஞ்சலிப்போம் என அவர் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழின விடுதலைப் போராட்டம், தமிழ் தேசத்தின் சுதந்திர மீட்சிப் போராட்டம் தொடங்கி ஏழு தசாப்தங்களை எட்டிவிட்டன.

முப்பது ஆண்டுகள் ஜனநாயக அறவழிப் போராட்டங்கள் அரசாங்கங்களின் இராணுவ அடக்குமுறைக்கு ஒடுக்குமுறைக்கு உள்ளானது. இனக்கலவரங்கள் தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிராக 1958 இல் இருந்து 1983வரை நாடு முழுவதும் பலதடவைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

அடக்குமுறைக்கு அடங்க மறுத்து எழுச்சி கொண்ட தமிழ் இளைஞர் சமுதாயத்திலிருந்து எழுந்த ஆயுத வழிப்போர் முப்பது ஆண்டுகளையும் கடந்து சர்வதேசம் வரை எட்டிநின்றது.

சர்வதேச அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே 2002இல் போர் நிறுத்தமும் இலங்கை தமிழர் தேச மக்கள் விடுதலைக்குப் பேச்சுக்களும் உடன்பாடுகளும் நோர்வே ஒஸ்லோ நகரில் இடம்பெற்றது. ஜனநாயக சக்திகளும் போராட்ட சக்திகளும் ஒன்றுபட்டு உயர்ந்து நின்றன.

இந்நிலையில், சர்வதேச சந்தர்ப்பம் தடுமாறிய நிலையில் 2009 மே 18இல் தாயக மண்ணில் இலட்சக் கணக்கில் எம் தமிழ் மக்கள் விடுதலைக்கு வித்துடலங்களாய் வீழ்ந்தனர். அந்த உச்ச விடுதலை விளைநிலத்தின் அடையாளம்தான் முல்லையில் முள்ளிவாய்க்கால் முற்றம் ஆகும்.

அங்கும் விடுதலை வேண்டிய ஆத்மாக்களுக்கு அஞ்சலி நினைகூரல் சுடரேற்றம் ஆண்டுதோறும் இடம்பெறுகிறது. இலங்கையிலும் உலக நாடுகளிலும் தமிழின விடுதலைப் போரில் உயிரைப் பலிகொடுத்தவர்கள், அவர்கள் குடும்பங்கள், பாதிக்கப்பட்ட போராளிகள், அங்கவீனர்கள்,  காணாமல் போனோரின் குடும்பங்கள், தமிழின விடுதலை மீது விசுவாசம் கொண்டவர்கள் என பல இலட்சம் குடும்பங்கள் மே 18இல் கண்ணீர் அஞ்சலி செலுத்துவர்.

இம்மக்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணீருடன் துன்பதுயரத்துடன் வாழ்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சையில் ஈழப்போர் நினைவிடம் பெரியார் பழ.நெடுமாறன் தலைமையில் அறக்கட்டளையினால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

அதுபோல் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவப்பட்டு அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுவதற்கு பொருத்தமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். சர்வதேச தமிழ் மக்களும் நிச்சயம் அந்த நினைவிடத்திற்கு உதவுவார்கள்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு கட்டுப்பாடுகள் உண்டு. அஞ்சலிப்போர் முகக் கவசம் அணிந்து செல்லவேண்டும். திரளாக மக்கள் நடமாடுவது தவிர்க்கப்படுதல் வேண்டும். மருத்துவ நிபுணர் அமைப்புக்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியே நடத்தல் வேண்டும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

210 நாடுகளில் கொவிட்-19 வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. ஆயினும் மே-18ஆம் நாளை நாம் நினைவுகூர்ந்தேயாக வேண்டும். அடக்குமுறை ஒடுக்குமுறைக்குள்ளான ஒரு இனம் தங்கள் தேசத்தின் விடுதலைக்காக விடிவுக்காகத் திடசங்கற்பம் கொண்ட மக்கள் இலங்கையிலும் உலகில் எங்கிருந்தாலும் மே-18ஆம் நாளை நெஞ்சில் நிறுத்தி அஞ்சலி செலுத்த வேண்டும். விடுதலைபெற அர்ப்பணிப்போமென திடசங்கற்பத்துடன் உறுதி பூணவேண்டும்.

இந்நிலையில், வரும் மே 18 ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்தில் அந்த அஞ்சலியை நிறைவுசெய்ய வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி தமிழின விடுதலைக்கு வித்துடல் விதைத்த அந்த மக்களுக்காக கோயில்களில், வீடுகளில் அமைதியாக விளக்கேற்றி அஞ்சலிப்போம்.

முள்ளிவாய்க்காலிலும் அந்தந்த மாவட்டங்களிலும் வீடுகளிலும் அமைதியாகச் சுடரேற்றிப் பிரார்த்தித்து அஞ்சலி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More