நாடு முழுவதுமுள்ள சுமார் 50 அரச வைத்தியசாலைகளிற்குள் நுழைந்து, போலி வைத்தியராக நடித்து 3 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தங்க நகைகளைத் திருடிய “எம்டன்“ சிக்கியுள்ளார்.
அமல் கரியவாசம் என்ற இந்த நபரை, ஹோமாகவிலுள்ள வீட்டில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரத்தை சேர்ந்த இவர் பாடசாலை நாட்களில் இருந்து எம்டன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். பாடசாலை நாட்களிலேயே மோசடிகளில் ஈடுபட்டதால் அந்த பெயரால் அழைக்கப்பட்டார்.
பாடசாலை காலத்தை முடித்ததும், அனுராதபுரத்தில் நிறுவனமொன்றில் பணியாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பணியிலிருந்து நீக்கப்பட்டவர், வேறு சில நிறுவனங்களில் இணைந்த போதும், அங்கெல்லாம் மோசடியால் நீக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பிரதேசத்தில் வேலை தேட முடியாத நிலையில் கொழும்பிற்கு சென்றுள்ளார்.
அங்கு தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய போது, ஏற்கனவே இருந்த காதல் உறவை மறைத்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சிறிது காலத்திலேயே தனியார் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, வைத்தியராக நடித்து திருட ஆரம்பித்தார்.
வைத்தியசாலைகளிற்கு வரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி நகைகளை திருடுவதே அவரது இலக்கு. வைத்தியசாலைக்குள் அவர் திருடிய ரகமே தனியானது.
முதலில் வைத்தியசாலையை நன்றாக நோட்டம் இடுவார். பின்னர் வைத்தியரை போல நடித்து வைத்தியசாலைக்கு நுழைந்து, பிறரின் கவனம் செல்லாத வெற்று அறைக்குள் நுழைந்து அ்த பகுதியிலுள்ள நோயாளர்களை அழைத்து பரிசோதனை செய்வார்.
இதன்போது நோயாளர்களின் காதணி, தங்க சங்கிலிகளை கழற்றி மேசையில் வைக்க சொல்வார். பரிசோதனையின் பின்னர், அவர்களை பிறிதொரு அறைக்கு சென்று, பரிசோதனையை முடித்து விட்டு வருமாறு கூறுவார்.
அந்த நோயாளி அங்கு சென்றதும், எம்டன் எஸ்கேப் ஆகி விடுவார்.
காலி, கராப்பிட்டிய வைத்தியசாலைக்குள் நுழைந்து ஒரே நாளில் 8 பெண்களின் தங்க நகைகளை திருடியிருந்தார். இது குறித்து காலி பொலிசாரிடம் முறையிடப்பட்டிருந்தது.
அதன்படி, விசாரணையை மேற்கொண்ட பொலிசார், ஹோமகமவில் உள்ள சந்தேக நபரின் வீடு குறித்த தகவல்களை கண்டுபிடித்தனர். திடீர் சோதனையின்போது வீட்டில் இருந்த சந்தேக நபரை கைது செய்தனர்.
போலி வைத்தியராக நடித்துள்ள சந்தேக நபரை விசாரித்தபோது, அவர் அனைத்து திருட்டுகளையும் ஒப்புக்கொண்டார். அதன்படி, கண்டியில் உள்ள வைத்தியசாலையொன்றில் திருடிய நகைகள் வீட்டில் மீட்கப்பட்டன.
நாடு முழுவதும் 50 க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளுக்குச் சென்ற எம்டன், அப்பாவி பெண்களின் நகைகளை திடியது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த பணத்தின் மூலம் இரவு விடுதிகளுக்குச் சென்று இன்பம் தேடினார். இப்பொழுது கம்பி எண்ணி வருகிறார்.