இரத்தினபுரி மக்கள் பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த இரத்தினக்கல் கோபுரம் அமைக்கும் கனவை நனவாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, தெமுமாவத்தை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச இரத்தினக்கல் கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டுவதனை முன்னிட்டு காணொளி தொழில்நுட்பம் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்த போதே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொளி தொழில்நுட்பம் ஊடாக பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் 4 ஆண்டு காலத்திற்குள் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண துறையில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
எமது தாய்நாடு இரத்தின தீபம் என்று போற்றப்படுகிறது. உலகின் பார்வையில் அந்தளவிற்கான மதிப்பை இரத்தினக்கல் கைத்தொழிலின் மூலம் நாம் பெற்றுள்ளோம்.
இந்தத் கைத்தொழில் நேற்று இன்று ஆரம்பிக்கப்பட்டதொன்று அல்ல. பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் இந்த பூமியிலிருந்து வெளிப்படும் கற்களின் மதிப்பை நாட்டிற்கு அர்ப்பணித்தனர்.
உலகின் வளர்ச்சிக்கேற்ப இந்த கைத்தொழிலும் முன்னேற்றமடைந்தது. இலங்கை மட்டுமல்ல, உலகின் பல நாடுகளும் இரத்தினக்கல் கைத்தொழிலுக்குள் போட்டியிட்டன. இருப்பினும்,குறிப்பிட்ட நேரத்தில் நம் நாடு அதில் கவனம் செலுத்தவில்லை.
இதன் விளைவாக, இரத்தினக்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். அவர்களது குடும்பங்களின் குழந்தைகளும் அதனால் பாதிக்கப்பட்டனர்.
ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் எப்போதும் இரத்தினக்கல் கைத்தொழிலைப் பாதுகாக்க முயற்சித்தோம். இரத்தினக்கல்லின் மதிப்பை நாட்டின் மதிப்பிடுடன் இணைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரியில் உள்ள உங்களுக்கு இரத்தினக்கல் குறித்து புதிதாக எதனையும் கூறுவதற்கு இல்லை. சப்ரகமுவ போன்றே மேலும் பல மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் இந்த இரத்தினக்கல் கைத்தொழில் குறித்து நாங்கள் முன்னரைவிட அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இரத்தினபுரிக்கு இரத்தினக்கல் கோபுரம் அமைக்கும் கனவு நனவாவதாக நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.