மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம், இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அங்கு சில நாட்கள் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்தது. மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 1ஆம் திகதி வனப்பகுதியில் விறகு எடுக்க சென்ற 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. மணிப்பூரின் மோரே பகுதியில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகிறார்கள்.
இவர்களில் சிலர் இன்று அதிகாலை ஒரு கோவில் அருகே தூங்கிக்கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்தது.
பாதுகாப்பு படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார்.
உடனே பாதுகாப்பு படையினர் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் சண்டை நடந்தது. இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.