இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்டமாக தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19) தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும், பா.ஜனதா தலைமையிலான கூட்டணியும் களம் காண்கின்றன.
இதேவேளை, நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. 4 முனை போட்டி நிலவும் தமிழகத்தில் பிரதமர் மோடி 9 முறை பா.ஜனதா அணிக்காக பிரசாரம் செய்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதால் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இன்றுடன் பிரசாரம் நிறைவடைவதால் அனைத்து தலைவர்களும், இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்துவிடும்.
இந்தியா முழுவதும் மொத்தம் 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளநிலையில் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.