யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடத்தப்பட்டது.
வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், யாழ். மாநகர சபை ஆணையாளர், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மடம் அறக்கட்டளையின் பொறுப்பாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண இராசதானி காலத்துக்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. எனினும், மந்திரி மனை அமைந்துள்ள காணி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக காணப்படுகிறது.
இந்நிலையில் மந்திரி மனையை புனரமைப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், கலந்துரையாடலில் உரிய தீர்மானங்கள் எட்டப்படாமையால் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இவ்விசேட கலந்துரையாடலின்போது சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மந்திரி மனையை புனரமைத்து பாதுகாப்பதற்கு மடம் அறக்கட்டளை பொறுப்பாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்தின் திட்ட முன்மொழிவுக்கு அமைய, திணைக்கள மேற்பார்வையுடன் அறக்கட்டளையின் நிதியில் மந்திரி மனையை புனரமைக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணக்கப்பாட்டுக்கு அமைய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கோரிக்கை அடங்கிய கடிதம் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி பிராந்திய தொல்பொருள் திணைக்களத்தினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.