செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் எளிமை, சொல்ல வந்த விடயத்தை நேரடியாகக் கூறுதல், ஒவ்வொரு கவிஞனுக்கும் தனியான பாணி என்று ஈழத்துக்கவிதைகள் பல | நேர்காணல் | இ.பத்மநாப ஐயர் | சந்திப்பு : பொ.ஐங்கரநேசன் (பகுதி 4)

எளிமை, சொல்ல வந்த விடயத்தை நேரடியாகக் கூறுதல், ஒவ்வொரு கவிஞனுக்கும் தனியான பாணி என்று ஈழத்துக்கவிதைகள் பல | நேர்காணல் | இ.பத்மநாப ஐயர் | சந்திப்பு : பொ.ஐங்கரநேசன் (பகுதி 4)

7 minutes read

unnamed (2)

காலச்சுவடு சஞ்சிகையின் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான அணுகு முறைக்கு, அதன் இலக்கியக் கனதியை ஏற்றுக்கொண்டவர்கள் கூட தமது விசனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், அண்மைக்காலமாக காலச்சுவடில் இங்கிலாந்துக்கான ஆலோசகராக உங்களின் பெயர் இடம் பெற்று வருகிறது. ஒரு தன்னிலை விளக்கத்திற்கு நீங்கள் தள்ளப்பட்டிருக்கிறீர்களல்லவா?

காலச்சுவடில் வெளியான சேரனின்  நேர் காணல், சில வாசகர் கடிதங்கள், முதற்தடவையாக இலங்கைக்கு போய்த் திரும்பிய பின்னர் காலச்சுவடு ஆசிரியர் கண்ணனும,; ரவிக்குமாரும் பத்திரிகைகளுக்குத் தெரிவித்த கருத்துக்கள் போன்றவை இப்படியான ஒரு எண்ணக் கருவைப் பலரில் ஊட்டி இருப்பது உண்மைதான். இந்த விடயங்களில் எனக்கும் அதிருப்திகள் இருக்கின்றன. ஆலோசனைக் குழு தொடர்பாகக்  கண்ணன் என்னுடன் பேசிய பொழுது, சுந்தரராமசாமியுடனான தொடர்பாலும், அந்த அடிப்படையில் காலச் சுவடு மீது உருவான மதிப்பாலும் சம்மதித்தேன். ‘குஜராத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்காகக் குரல் கொடுக்கும் காலச் சுவடு பக்கத்தில் இருக்கும் ஈழத் தமிழர் தொடர்பாகத் தீர்க்கமான முடிவெடுக்கத் தயங்குவதேன்’ என்று ஈழத்தில் அதன் வாசகர்கள் தொடர்ந்தும் கேட்டு வருகிறார்கள். தமிழகத்தில் வெளியாகும் ஒரு இலக்கியச் சஞ்சிகை ஈழப் போராட்டம் தொடர்பாகத் தனது கருத்தை அறிவிக்க வேண்டியது  கட்டாயமானது அல்ல. ஆனால் காலச் சுவடு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானது என்ற  விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் நிலையில,; தன் நிலையைத் தெளிவு படுத்த வேண்டியது அவசியம். வாசகர் கடிதங்களுக்கூடாக பதில்களைச் சொல்லிக் கொண்டிராமல் பட்டவர்த்தனமாகத் தன் நிலைப்பாட்டை  அறிவிக்க வேண்டிய நிலைக்குக் காலச்சுவடு தள்ளப்பட்டுள்ளது.  காலச் சுவடின் பார்வையில் தெளிவு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு நானும் முயலுவேன். முரண்பாடாக அமையும் பட்சத்தில் காலச் சுவடின் ஆலோசனைக் குழுவில் நான் இருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டி வரலாம். ஈழத்திலும் சரி, இப்போது புகலிடத்திலும் சரி போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களைப் பதிப்பிப்பதில் நான் துணைநின்றதில்லை. இதி;ல் தெளிவாகவே இருக்கிறேன்.

ஈழத்தமிழர்களின் புகலிட இலக்கியத்துக்கு ஏறத்தாழ இரண்டு தசாப்த கால வயதாகிறது. அதன் வளர்ச்சிப் போக்கு குறித்த உங்களின் பார்வை எப்படி இருக்கிறது?

புகலிட இலக்கியம் இன்னமும் பெரிய அளவில் புலம் பெயர்ந்தவர்களின் பிறந்த மண் நினைவுகளைக் கொண்ட இலக்கியமாகவே இருக்கிறது. இன்று எழுதிக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான படைப்பாளிகள் குறைந்தது தங்களின் பாதி வாழ்க்கைக் காலத்தை இலங்கையில் கழித்தவர்கள் என்பதுதான் அதற்கான காரணம். இந்தப் படைப்பாளிகளைப் பொறுத்த வரை புதிய கலாச்சாரச் சூழலினதும், அனுபவங்களினதும் பாதிப்பு புதிய பரிமாணங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டும். இவை மெதுவாகவே நிகழமுடியும் என்று நினைக்கிறேன். ஆனாலும் மாற்றங்கள் நிகழாமலும் இல்லை. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் புகலிடச் சூழலின் வாழ்நிலையைப் பிரதிபலிக்கின்ற படைப்புகள் வரத்தான் செய்கின்றன. குறிப்பாக பின் நவீனத்துவம். பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் அதிக அளவில் உள்வாங்கப்படுவதைக் காணமுடிகிறது. ஆங்கிலம் வழியாக இல்லாமல் மூலமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுவதையும் புகலடச் சூழல் சாத்தியமாக்கியுள்ளது. டென்மார்க்கில் வாழும் தர்மகுலசிங்கம் என்பவர் டனிஷ் மொழிப்படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார். இதன் அடுத்த கட்டமாகப் புகலிட மொழியிலேயே எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்கள். கலாமோகன் பிரெஞ்ச்சில் எழுதிய கவிதைகள் நூலாக வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஈவ்லின் ரத்தினம் நூலகத்தில் நூலகராக இருந்தவர் செல்வராஜா. இப்போது லண்டனில் இருக்கிறார். அவரது பதின்நான்கு வயது மகள் மௌலியா இதுவரையில் ஆங்கிலத்தில் இரண்டு சிறு நாவல்களை எழுதியிருக்கிறார். பிரான்ஸ்ஸில் கவிஞர் பாலகணேசனின் மகள் ஒருவர் பிரெஞ்ச் இணையத்தளம் ஒன்றில் கவிதைகளை எழுதி வருகிறார். இப்படி இன்னும் சில உதாரணங்கள் சொல்லலாம். இவையெல்லாம் ஆரம்பமே. காலப்போக்கில் இவை இன்னும் பரவலாகவும் ஆழமாகவும் நிகழும்.

எங்களுடையது என்று சொல்லிக்கொள்ளும் படியான முகத்தை, புகலிட இலக்கியம் எதிர்காலத்தில் எந்த அளவுக்குக் கொண்டிருக்க முடியும்?

புகலிடத்தில் வாழும் தமிழர்களின் இந்தத் தலைமுறைகளுக்குத் தமிழ்தான் தாய்மொழி. இவர்களில் கணிசமானவர்கள் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள். அதே வேளை மிகச்சிறுவயதில் புலம்பெயர்ந்தவர்களினதும். இங்கு பிறந்து வளர்ந்தவர்களினதும நிலைவேறு. இவர்களின் முதல் மொழியும் சிந்தனா மொழியும் ஆங்கிலம் அல்லது வேறு ஐரோப்பிய மொழியாகவே இருக்கிறது. தமிழ் இரண்டாம் மொழியாக அதுவும் பல குடும்பங்களில் பேச்சு மொழியாக மட்டுமே வாழுகிறது. தமிழைக்கற்றலிலும். கற்பித்தலிலும் கூட அதிகம் நாட்டமில்லை. இவர்களுக்கும் அடுத்த தலைமுறையைப்பற்றி நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இந்த நிலையில் இவர்கள். தாங்கள் வேரூன்றி விட்ட மண்ணில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, அந்தக்கலாச்சாரப் பின்னணியில், புகலிட மொழி ஒன்றிலேயே பிரதிபலிக்கப்போகிறார்கள். இந்தப்படைப்புகளில் தமிழ் அடையாளம் எங்கே இருக்கப்போகிறது? எங்களுடைய வாழ்நிலைக்கூடாகக் காவப்படும் தமிழ்ப்பண்பாட்டின் எச்சங்கள் சிலவேளை பதிவாகலாம். இந்த வகையிலேயே, புகலிடச்சூழலில் ஈழத்தமிழர்கள் மேற்கொண்டு வருகிற கலை-பண்பாட்டு நிகழ்ச்சிகளின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. கோயில்கள் மீதான அக்கறையையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோயிலுக்கு வரும் இளைய தலைமுறையின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் தேவாலயங்களுக்குச் செல்லுவது குறைந்தபடியால்தான் பராமரிக்க முடியாமல் தேவாலயங்களை இங்கே விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். லண்டன் ஹைகேற்றில் அப்படி விற்பனைக்குவந்த ஒரு தேவாலயம்தான் உயர்வாசற் குன்று முருகன் கோயிலாகியிருக்கிறது. வருங்காலத்தில் எங்களுடைய கோயில்களும் விற்பனைக்கு வரலாம். தமிழ் அடையாளம் தொடர்பான சிந்தனைகள் ஆங்காங்கே எழுந்தாலும், வரும் தலைமுறைகளில் தமிழைத் தக்க வைக்கும் அளவுக்கு அவை இன்னமும் செயல் வடிவம் பெறவில்லை. அதில் காலந்தாழ்த்துவது மிகப்பெரிய தவறாகும்.

தமிழ் உலகத்தைத் தழுவும் அதே வேளை, உலகமும் தமிழைத் தழுவி வருகிறது. அதில் ஆங்கிலம் தமிழைத் தின்றுவருவதால், அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் இந்த நூற்றாண்டின் இறுதியில் தமிழும் இடம் பெற்று விடும் என்று யுனெஸ்கோ தெரிவித்திருக்கிறது. இதை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்?

காலத்துக்குக்காலம் தமிழின் வரிவடிவம் மாறியுள்ளது. பழந்தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்து புதிய சொற்கள் உருவாகியுள்ளன. பேச்சு மொழியில் மாற்றம் கண்டுள்ளது. என்றாலும் செவ்வியல் மொழிகளுள் ஒன்று என்ற பெருமையோடு தமிழ் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது, – தமிழை ஆங்கிலம் ஒரங்கட்டிவிடும் என்று சொல்லுகிறார்கள். இந்த அச்சம் தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஒன்று. தமிழ்நாட்டில் படித்த குடும்பங்களில் ஆஙகிலம் ஒரு தொடர்பு மொழி என்பதற்கும் மேலாக அந்தஸ்து மொழியாகவே கருதப்படுகிறது. ஆரம்பக்கல்வி முதல் ஆங்கிலமே பெரும்பாலும் போதனா மொழியாக உள்ளது. வெகுசன ஊடகங்கள் அளவுக்கு மீறிய ஆங்கிலம் கலந்த தமிழையே வலிந்து பிரயோகிக்கின்றன. இது இன்னுமொரு மணிப்பிரவாளநடை போலவே தோன்றுகிறது. இந்த ஊடகங்களின் பெயர்களும் ஜீனியர் விகடன, தமிழன் எக்ஸ்பிரஸ், சன் TV, ரேடியோ மிர்ச்சி என்று தமிங்கிலமாகவோ அல்லது ஆங்கிலமாகவோதான் இருக்கின்றன. திரைப்படங்களுக்கும் யூத, வின்னர் என்று பெயர் வைத்தால்தான் ஓடுமென்று நம்புகிறார்கள். இந்தப் போக்கை மாற்றமுடியுமா என்பது சந்தேகம் தான். ஆனாலும் நகரங்களைத்தாண்டி ஆயிரக்கணக்கான கிராமங்களில் தமிழ் அதன் சிறப்பான தன்மைகளுடன் வாழும் என்பதுதான் உண்மை.

தொலைக்காட்சி, கணினி போன்ற மின்னணு ஊடகங்கள் வாசிப்பு நேரத்தைப் பறித்து வருவதால் புத்தக உலகின் எதிர்காலம் குறித்த ஐயம் எழுப்பப்படுகிறது. ஒரு பதிப்பாளன் என்ற வகையில் இதில் உங்களின் கருத்து என்ன?

புகலிடச்சூழலில் வாசிப்பு ஒரு பிரச்சினையாகத்தான் உள்ளது. பெருமளவு நேரம் வேலையுடன் செலவழிந்து போய்விடுகிறது. கிடைக்கின்ற சொற்ப நேரத்திலும் தொலைக்காட்சியின் முன்னாலேயே பலரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகள் என்னதான் பார்வையாளர்களைத் தம்வசம் இழுத்து வைத்திருந்தாலும் வெகுசன வாசிப்போ- தீவிரவாசிப்போ இன்னொரு புறம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சமீப ஆண்டுகளில் தமிழ்ப்பதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, வெளியாகும் நூல்களின் எண்ணிக்கையும் விற்பனையும் அதிகரித்திருக்கிறது. பதிப்பகங்களும் வாசகர்களைக் கவரும் விதமான வடிவமைப்பில் அச்சுத் தரத்துடன் நூல்களை வெளியிட ஆரம்பித்துள்ளன. சென்னையில் ஒவ்வொருவருடமும் பொங்கலை ஒட்டி புத்தக விற்பனையாளர்கள் – பதிப்பாளர்கள் சங்கம் புத்தகக் கண்காட்சியை நடத்திவருகிறது. கடந்த இரண்டு தடவைகளிலும் அது பெற்றிருக்கும் வெற்றி புத்தக உலகம் குறித்த நம்பிக்கையைத் தந்துள்ளது.

ஈழத்திலும், போராட்டம் பெரும் நெருக்கடியைச் சந்தித்த காலத்தில் கூட சஞ்சிகைகளையும், நூல்களையும் வெளியிடுவதில் கரிசனை இருந்திருக்கிறது. போராட்டம் கொடுத்த புதிய கருப்பொருள்களை உள்வாங்கி கணிசமான அளவில் கவிதை – சிறுகதைத் தொகுப்புகளும், நாவல்கள் சிலவும் வெளியாகி இருக்கின்றன. முன்னர் புத்தகங்களை வெளியிட முடிந்தாலும் தாபனரீதியான ஒழுங்குகள் இல்லாததால் புத்தகங்கள் விற்பனையாவது கடினமாக இருந்தது. இப்போது நட்டம் ஏற்படாத அளவுக்குப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. வாசகர்களை நோக்கி  புத்தகங்களை எடுத்துச் செல்லும் வகையில் புத்தகக் கண்காட்சிகளை ஒழுங்கு செய்வது ஈழத்தில் புத்தக வெளியீடுகளை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ் இலக்கியத்துக்கு நோபல் பரிசு கிடைப்பதாயின், முதலில் ஈழத்தமிழ் இலக்கியத்துக்குத்தான் கிடைக்கும் என்ற கருத்து ஈழத்தின் சில படைப்பாளிகளிடத்தில் இருக்கிறது. இதுபற்றி …

எளிமை, சொல்ல வந்த விடயத்தை நேரடியாகக் கூறுதல், ஒவ்வொரு கவிஞனுக்கும் தனியான பாணி என்று ஈழத்துக்கவிதைகள் பல சிறப்பான தன்மைகளைக் கொண்டிருப்பதை மறுப்பதற்கு இல்லை. அதேவேளை சிறுகதை – நாவல் துறைகளில் தமிழ்நாட்டுப்படைப்புகள் உயர்வான இடத்தைப் பிடித்திருக்கின்றன என்பதே உண்மை. தமிழகத்தின் தரமான சிறுகதை எழுத்தாளர்களுக்கு நிகராக ஈழத்தில் சிலரைச் சுட்டக்கூடியதாக இருந்தாலும், தமிழக நாவலாசிரியர்களின் படைப்புத் தரத்தில் ஈழத்தில் எவரும் இருப்பதாகக் கூறமுடியாது என்பதுதான் என்னுடைய கணிப்பு. அத்தோடு, – தமிழ்ப்படைப்புகள் தமிழில் மட்டுமே அறியக்கூடியதாக இருக்கும் வரையில் நோபல் பரிசோ அல்லது அதைவிடப் பிரபலமற்ற வேறு சர்வதேச விருதோ கூட கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை. பிறமொழிகளில் தமிழ்ப்படைப்புகள் வெளிவந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். குறைந்தபட்சம் ஆங்கிலம், ஜேர்மன். பிரெஞ்ச் மொழிகளிலாவது வெளிவரவேண்டும். அப்போதுதான் உலகின் கவனத்துக்கு எமது படைப்புகள் கிட்டும்.

பிறமொழி இலக்கியங்கள் தமிழுக்கு வந்த அளவுக்கு ஈழத்து இலக்கியங்கள் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்பது உண்மைதான். இது குறித்து உங்களின் அக்கறை எவ்வாறு இருக்கிறது?

கலாநிதி செல்வா கனகநாயகம் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப்பேராசிரியராக இருக்கிறார். முன்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராக இருந்தவர். இவருடன் எனக்குத் தொடர்புகள் உண்டு. இவரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு,-ஏ.ஜே. கனகரத்னா, சோ.பத்மநாதன், எஸ். ராஜசிங்கம், சுரேஷ் கனகராஜா, லக்ஷ்மி ஹோம்ஸ்ஹோம், நந்தியின் சகோதரர் திருநாவுக்கரசு போன்றவர்களுடைய ஒத்துழைப்புடன் ஆங்கில மொழி பெயர்ப்புத் தொகுதியைக் கொண்டு வந்தோம். 36 கவிதைகளையும், 13 சிறுகதைகளையும் கொண்ட இந்தத் தொகுப்பை கனேடியப் பதிப்பகம் ஒன்று 2001இல் வெளியிட்டது. ஈழத்தின் இளங்கவிஞர்களில் ஒருவரான அமரதாஸ் சிறப்பாகப் புகைப்படங்களும் எடுக்கக்கூடியவர். அவர் எடுத்த படங்களில் ஒன்றுதான் இதன் அட்டைப்படமாக வந்திருக்கிறது. இந்த நூலைப் பொறுத்த அளவில் ஒரு ஒருங்கிணைப்பாளனாகவே என்னுடைய பணி அமைந்தது. இன்னும் இரண்டு தொகுதிக்களுக்கான மொழிபெயர்ப்புகளைச் செய்து வைத்திருக்கிறோம்.

லண்டனில் வாழும், ஆங்கிலத்தையும் தமிழையும் சரளமாகத் தெரிந்து வைத்திருக்கும் இளைய தலைமுறையினருக்குத் தமிழ் தகவல் நடுவம் மூலம் இரண்டு நாள் பயிலரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். இலக்கியம் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்துவதும், இவர்களை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்துவதுமே நோக்கமாக இருந்தது. திறமையுள்ளவர்களைக் கண்டறிந்து தொடர்ச்சியாகப் பயிற்றுவிப்பது என்றும் முடிவு செய்திருந்தோம். ஆனால் பலர் கலந்து கொண்டாலும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கோ அல்லது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ மொழியாக்கம் செய்யக் கூடியவர்களை இனங்காணமுடியவில்லை. இதுபோலவே ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க் என்று பயிலரங்குகள் நடத்தி, தமிழ் படைப்புகளை அந்த நாட்டு மொழிகளுக்குக் கொண்டு செல்வதை ஒரு இயக்கமாகவே நடத்த முயற்சி செய்தோம். இன்றுவரை அது வெற்றி அடையவில்லை.

நேர்காணலை நிறைவு செய்யும் வகையில், உங்கள் தரப்பிலிருந்து வேறு ஏதாயினும் சொல்ல விரும்புகிறீர்களா?

தமிழ் இணையம் என்ற இணையத்தளம் மூன்று – நான்கு வருடங்களின் முன்னால் ஆரம்பிக்கப்பட்டது.  ஈழத்தமிழர்களை விட, இந்தியாவுக்கு வெளியே வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற தமிழ்நாட்டவர்களும், மலேசியா-சிங்கப்பூர் தமிழர்களும் அதிகமாக இதில் பங்கேற்கின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரைத் திட்டம் செயற்படுகிறது. சங்க கால மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நினைவில் கொண்டு இப்படிப் பெயரிட்டிருக்கிறார்கள். இதில் திருக்குறள், நாலடியார், ஆத்திசூடி, திருமந்திரம் என்று 160 வரையிலான நூல்களை கணினியில் அச்சுப்பதிப்புச் செய்து மின் உரையாக-ந.வநஒவ- வெளியிட்டுள்ளனர்.

ஈழத்து நூல்களையும் இந்த இணையத்தில் சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஜேர்மனியில் உள்ள நா. கண்ணனும், நானும் இறங்கியிருக்கிறோம். தமிழகத்தில் 30 நூல்களை பதிவு செய்து இதுவரையில் 13 நூல்களை வலையேற்றியுள்ளோம். மு. தளைய சிங்கத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, எம்.ஏ. நுஃமான், சி. மௌனகுரு, சித்திரலேகா மௌனகுரு இணைந்து எழுதிய இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்|, எம்.ஏ. நுஃமானின் அழியாநிழல்கள், சு. வில்வரத்தினத்தின் அகங்களும் முகங்களும், காற்று வெளிக்கிராமம், கைலாசபதியின் ஒப்பியல் இலக்கியம், ரஞ்சகுமாரின் மோகவாசல, கி.பி. அரவிந்தனின் இனி ஒரு வைகறை, முகம் கொள், கனவின் மீதி, சோலைக்கிளியின் காகம் கலைத்த கனவு, அ. யேசுராசாவின் அறியப்படாதவர்கள் நினைவாக, மரணத்துள் வாழ்வோம; தொகுப்பு ஆகியனதான் அவை. ஆனால் மீதி நூல்கள் எழுத்துப்பிழை பார்க்க இயலாமல் இணையத்தில் ஏற்றப்படாமல் இருக்கிறது. நான் வணிக ரீதியிலான பதிப்பாளன் அல்லன். நண்பர்கள் பலரின் ஒத்துழைப்பினாலேயே என்னால் இவற்றையெல்லாம் செய்ய முடிந்திருக்கிறது. ஈழத்தில் புதிதாக நூல்களை அச்சிடுபவர்கள் அதனை குறுந்தகடில் ஏற்றி தருவார்களேயானால் சிரமமின்றி உடனடியாகவே இணையத்தளத்தில் சேர்த்து விடலாம். இதன் மூலம் உலகில் எந்த மூலையில் உள்ளவர்களிடமும் எங்களது படைப்புக்களை சேர்ப்பிக்க முடியும்.

முற்றும்

பொ.ஐங்கரநேசன் 

நன்றி | தினக்குரல் ( 31/08/2003) 

 

 முன்னைய பகுதிகள்…..

Part 1 – https://vanakkamlondon.com/one-min-interview/2014/03/7628/

Part 2 – https://vanakkamlondon.com/one-min-interview/2014/03/8118/

Part 3 – https://vanakkamlondon.com/one-min-interview/2014/04/9413/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More