Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் புலிகளுடைய அர்ப்பணிப்பை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது! சுமந்திரன்

புலிகளுடைய அர்ப்பணிப்பை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது! சுமந்திரன்

4 minutes read

புலிகளுடைய அர்ப்பணிப்பு எவராலும் கொச்சைப்படுத்தப்பட முடியாது. காரணம் அவர்கள் தங்களுக்காக உயிரைக் கொடுக்கவில்லை.எங்களுக்காக தங்கள் உயிர்களை கொடுத்தவர்கள். அதற்கு நாங்கள் எப்போதும் தலைசாய்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செவ்வியில்,

கேள்வி – பிரபாகரனின் ஆயுத போராட்டத்தை ஏற்கமாட்டேன் என்று ஏன் கூறுகின்றீர்கள்?

பதில் – பிரபாகரனின் ஆயுத போராட்டத்தை ஏற்கமாட்டேன் என்று நான் எப்போதும் கூற மாட்டேன். நான் அவ்வாறு எந்த செவ்வியிலும் கூறவில்லை. புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை நீங்கள் ஏற்கின்றீர்களா? அல்லது உடன்படுகின்றீர்களா? என்பதே குறித்த செவ்வியில் எழுப்பப்பட்ட கேள்வியாகும். நான் அதற்கு இல்லை என்று கூறிவிட்டு உடனடியாகவே நானாகவே அதற்கான காரணத்தையும் கூறினேன். நான் எப்போதுமே வன்முறைகளை வெறுப்பவன்.

ஆயுத முறைமையை நான் ஏற்கமாட்டேன். ஆயுதத்தினால் செய்யப்படுகின்ற வன்முறையை நான் ஏற்கமாட்டேன். எதனையும் அடைவதற்கு ஆயுத முறையை பிரயோகிப்பதை ஏற்பவன் அல்ல நான். வன்முறை பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு முறையாக இருக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி – சரி புலிகளின் ஆயுத போராட்டம் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் – புலிகளுடைய மட்டுமல்ல தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டம் தொடர்பாக நான் பல இடங்களில் பேசியிருக்கின்றேன். இந்த சர்ச்சை வந்ததால் இதனை கூறுகின்றேன் என்று யாரும் நினைக்கக்கூடாது. இது தொடர்ச்சியாக நான் கூறிவருகின்ற விடயமாகும்.

2011 இல் வந்தாறுமூலையில் தந்தை செல்வாவின் நினைவு பேருரையை நான் நிகழ்த்தியபோது பகிரங்கமாக இது குறித்து சில விடயங்களை குறிப்பிட்டேன். அது குறித்து தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கேள்வியெழுப்பப்பட்டது.

அப்போது அரியநேத்திரன், யோகேஸ்வரன் ஆகியோர் எனக்கு ஆதரவாக பேசினர். செய்திகள் வரும்போது முழுப் பிம்பமும் வராது. ஒரு தலைப்புத்தான் வரும்.

ஈழத்து காந்தி என்று தந்தை செல்வா அழைக்கப்பட்டார். காந்தியடிகள் விடுதலைக்காக அல்லது தனக்கு ஆதரவாக யாராவது ஆயுத போராட்டத்தை நடத்தினால் தனது சாத்வீக போராட்டத்தை நிறுத்திவிடுவார். காரணம் தன்னுடைய சாத்வீக போராட்டத்துக்கு களங்கம் வரக்கூடாது என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். அதுதான் காந்திய வழி. அதைத்தான் தந்தை செல்வா செய்தார்.

எனவே வன்முறை தகாதது. வன்முறை தவிர்க்கப்பட வேண்டியது. நீதி கேட்டு போராடுகின்ற நாங்களும் மற்றவர்கள் விடயத்தில் நீதியாக இருக்கின்றோம் என்ற நிலைப்பாட்டில் இருக்கவேண்டும் என்றே அந்தக் கூட்டத்தில் கூறியிருந்தேன்;.

2014 ஆம் ஆம் ஆணடு நவம்பர் மாதம் நடராஜா ரவிராஜின் நினைவு பேருரையை நிகழ்த்தியிருந்தேன். அதன் தொனிப்பொருள் மென்வலு என்பதாகும். அதில் நான் இந்த விடயத்தை விபரமாக கூறியிருந்தேன். அதில் மென்வலுவை விபரித்து சொல்லும்போது வன்வலு இருக்கக்கூடாது என்று கூறினேன்.

புலிகளுடைய அர்ப்பணிப்பு எவராலும் கொச்சைப்படுத்தப்பட முடியாது. காரணம் அவர்கள் தங்களுக்காக உயிரைக் கொடுக்கவில்லை.எங்களுக்காக தங்கள் உயிர்களை கொடுத்தவர்கள். அதற்கு நாங்கள் எப்போதும் தலைசாய்க்கவேண்டும்.

ஆனால் அந்த அர்ப்பணிப்பு வீணாகாமல் இருக்கவேண்டுமானால் நாங்கள் இன்றைய நாளில் ஆயுதத்தை தொடக்கூடாது. புலிகளின் அர்ப்பணிப்பு வீணாகாதவாறு எமது உரிமையை வென்றெடுக்கவேண்டும் என்று கூறினேன்.

ஆயுத வன்முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனினும் நான் தவறு என்று நினைக்கும் பாதையில் வேறு வழியின்றி மக்களுக்காக உயிரைக் கொடுத்த அந்த அர்ப்பணிப்பு போற்றத்தக்கது என்று கூறியிருக்கின்றேன்.

யாழில் வாள்வெட்டு குழுக்கள் இயங்கியபோதும் நான் பேசியிருக்கின்றேன். வன்முறை கலாசாரம் எமது சமூகத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டும். வன்முறையை நாங்கள் போற்றுகின்ற காரணத்தினால் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் நான் கூறியிருந்தேன். இவற்றை நான் தொடர்ச்சியாக பேசியுள்ளேன்.

அன்று புலிகள் எடுத்த தீர்மானம் சரியா தவறா என்று நாம் இன்று விவாதிக்க முடியாது. ஆனால் இன்றைய நிலையில் தமிழர்கள் யாரைக் கேட்டாலும் ஆயுத போராட்டம் வேண்டாம் என்றே கூறுவார்கள். இன்று நாங்கள் ஆயுத போராட்டம் வேண்டாம் என்று கூறுவதானது அன்றைய தீர்மானம் தவறு என்று பொருள்படாது.

கேள்வி – அப்படியானால் புலிகளின் அர்ப்பணிப்பை நீங்கள் மதிக்கின்றீர்கள்?

பதில் – நிச்சயமாக நான் மதிக்கின்றேன். அதனை இந்த சர்ச்சை எழுந்ததால் கூறவில்லை. கடந்த 10 வருடங்களில் பல தடவைகள் கூறியிருக்கின்றேன்.

கேள்வி – புலிகளின் போராட்டம் காரணமாகவே தமிழர் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டது என்பது குறித்து?

பதில் – அது எங்களுக்கு நன்மையளிக்கும் வகையில் சர்வதேசமயப்படுத்தப்பட்டதா? அல்லது தீமையளிக்கும் வகையில் செய்யப்பட்டதா என்ற கேள்விகளைக் கொண்டது. அதனால் இலாபமான நிலையும் ஏற்பட்டது. அது எனக்கு தெரியும். எதிரான நிலைப்பாடுகளும் ஏற்பட்டன. 30 க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் அமைப்பை தடை செய்தன. இன்றும் அந்த தடை உள்ளது. எனவே இது சர்வதேசத்தில் எமது போராட்டத்தை முன்கொண்டு சென்றதா? பின் கொண்டு சென்றதா என முடிவுக்கு வருவது கஷ்டமாகும் என தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More