March 31, 2023 6:42 am

இலங்கையில் தமிழ் இசைக் கலைஞர்களுக்கு மதிப்பில்லை | ஒக்டபாட் பானு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

1. நீங்கள் இசைத்துறையில் பிரவேசித்ததற்கான காரணம் என்ன?

இசைத்துறையில் எனக்கு ஏற்பட்ட ஆர்வமும் என்னை சூழ்ந்திருக்கின்றவர்களின் உற்சாகமும் தான் நான் இசைத்துறையில் உள்நுழைந்ததற்கான காரணம்.

2. உங்களது பரம்பரை வழியானவர்கள் இசைத்துறையில் இருந்திருக்கின்றார்களா? 

எனது தந்தையும் தாயும் இசைப் பரம்பரையை சேர்ந்தவர்கள். எனது தந்தை பல தாயகப் பாடல்களுக்கு தபேலா இசைக்கருவி வாசித்த பெருமைக்குரியவர். ‘தபேலா வரதன்’ என்றால் அனைவருக்கும் தெரியும். எனது மாமா வாசன் சாரங்கா இசைக்குழுவின் இயக்குநர்.

எனது அப்பப்பா பிள்ளைநாயகம் தோற்கருவிகளை வாசிக்கும் வித்துவான். அவர் தோற்கருவிகளை செய்யும் வல்லமையும் கொண்டவர். எனது பெரியப்பா திருநாவுக்கரசு மிருதங்க வித்துவான். அவர் கலாபூஷணம் விருது பெற்றவர். அம்மாவினுடைய அப்பா வி.கே.ரத்தினம் அவர்கள் ஒரு நடிகர்.

உலகப் புகழ்பெற்ற நடிகை மணி வைரமுத்து அவர்கள் எனது மாமா. எனக்கு பானுதீபன் என்று பெயரிட்டதும் அவரே.

3. முதன்முதலில் எத்தனை வயதில், எந்த நிகழ்ச்சியில் மேடை ஏறினீர்கள்?

நான் முதன்முதலாக ஏழு வயதில் காங்கேசன் துறையில் ஒரு மேடை நிகழ்ச்சியில் அப்பாவுடன் இணைந்து தபேலா வாத்தியக் கலைஞராகத்தான் மேடையேறினேன்.

4. இத்தனை இசைக்கருவிகள் இருக்கும்போது ஒக்டபாட்டினை தெரிவுசெய்ததற்கான காரணம் என்ன?

தற்காலத்து பாடல்கள் அனைத்திலும் ஒக்டபாட் வாத்தியத்தின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகும். ஆரம்பத்தில் நான் பல வருடங்களாக தபேலா இசைக்கருவி தான் வாசித்துக்கொண்டிருந்தேன். 16 வயதில் தான் எனக்கு இந்த ஒக்டபாட் வாத்தியம் மீது ஆர்வம் வந்தது.

5. ஒக்டபாட்டினை விட வேறு ஏதும் இசைக்கருவிகளை இசைப்பீர்களா? 

ஆம். அனைத்து தாள அல்லது தோல் வாத்தியங்களையும் இசைக்கும் திறமை எனக்குண்டு.

6. உங்களது குரு யார்? அவரைப் பற்றி கூறுங்கள்…

எனது அப்பாதான் பிரதான குரு. அதன் பின்னர், மிருதங்கத்துக்கு எனது மாமா சுகுணதாசன் அவர்கள் தான் குரு. ஆனால், ஒக்டபாட் இசைக்கருவியை, அதை வாசிக்கும் பிற கலைஞர்களை பார்த்தே கற்றுக்கொண்டேன்.

7. ஒக்டபாட் என்ற ஒரே இசைக்கருவியில் பல இசைக்கருவிகளின் ஒலியையும் எழுப்புகிறீர்கள்… என்னென்ன இசைக்கருவிகளின் ஒலியை ஒக்டபாட்டில் கொண்டுவர முடியும்?

தோல் வாத்தியங்கள் அனைத்தையும் ஒக்டபாட் இசைக்கருவியில் என்னால் வாசிக்க முடியும்.

8. நீங்கள் புலம்பெயர் நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்துகொண்டுள்ளீர்கள். முதன்முதலாக எந்த நாட்டுக்கு சென்று இசை வழங்கினீர்கள்? இதுவரை எந்தெந்த நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள்? 

நான் முதன்முதலாக 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்று இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றேன். அதன் பின்னர் லண்டன் (4 தடவைகள்), சுவிஸ் (2 தடவைகள்), நோர்வே (2 தடவைகள்), அவுஸ்திரேலியா (3 தடவைகள்), இந்தியா (15 தடவைகள்), மலேஷியா (ஒரு தடவை) ஆகிய நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சியை வழங்கியுள்ளேன்.

9. மேடை நிகழ்ச்சிகளில் மட்டும் தான் பங்குகொள்கிறீர்களா? அல்லது வேறு இசை சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறீர்களா?

மேடை நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, நாதஸ்வர கச்சேரி, நாட்டிய நிகழ்ச்சி, வயலின் கச்சேரி, சங்கீதக் கச்சேரி, பஜனை, கர்நாடக இசை நிகழ்ச்சிகளிலும் இணைந்து வாசித்து வருகிறேன்.

10. இலங்கை, இந்திய சினிமா துறைகளில் Recording பாடல்களுக்கு இசை வழங்கியுள்ளீர்களா? 

இந்திய திரைப்பட Recording பாடல்களுக்கு இசை வழங்கவில்லை. ஆனால், பிரபல இசையமைப்பாளர்களின் மேடை இசை நிகழ்ச்சிகளில் வாசித்திருக்கிறேன். இலங்கையில் பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து வேலை செய்த நிலையில் 1000க்கும் மேற்பட்ட Recording பாடல்களுக்கு இசை வழங்கியுள்ளேன்.

11. எந்தெந்த தென்னிந்திய இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறீர்கள்?

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிகரன், சித்ரா, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன், அநுராதா ஸ்ரீராம், மதுபால கிருஷ்ணன், ஹரிணி, ஸ்ரீனிவாஸ், வாணி ஜெயராம், மகதி, முகேஷ், வி.வி.பிரசன்னா, தேவன், ஸ்ரீராம், அனந்து, வேல்முருகன், சீர்காழி சிவசிதம்பரம், பீ.சுசீலா, மலேசியா வாசுதேவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் இசையமைப்பாளர்களான கங்கை அமரன்,  ‘தேனிசை தென்றல்’ தேவா, பரத்வாஜ், சிற்பி, தீனா, ஸ்ரீகாந்த் தேவா, அனிருத், வாத்தியக் கலைஞர் சிவமணி போன்றோருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன்.

12. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானோடு எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று உங்களது முகநூலில் உள்ளது. அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது? அவருடன் இசை நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளீர்களா?

நான் இசைப்புயல் ரஹ்மான் அவர்களுடன் இசை நிகழ்ச்சியில் ஈடுபடவில்லை. எனினும், அவரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கும் பாக்கியம் கிடைத்தது. அண்மையில் மறைந்த பம்பாய் பாக்கியா அவர்கள் மூலம் ஏற்பட்ட இந்த சந்திப்பின்போது எனக்கு கடவுளை கண்டது போலிருந்தது.

13. பாடும் நிலா எஸ்.பி.பியுடன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவத்தை பற்றி கூறுங்கள்…

‘எஸ்.பி.பி கோல்டன் நைட்’ இலங்கையில் நடந்த மிகப் பிரம்மாண்ட, அவர் இங்கே கலந்துகொண்ட இறுதியான இசை நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியில் நானும் இசை வழங்கியிருந்தேன். அது எனக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். மறக்க முடியாத நிகழ்வு.

14. அண்மையில் சென்னையில் நடைபெற்ற ‘தேனிசை தென்றல்’ தேவாவை கௌரவிக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒக்டபாட் இசைத்துள்ளீர்களே… 

எனது முகப்புத்தக பக்கத்தில் உள்ள எனது இசைக் காணொளிகள்தான் நான் வெளிநாடுகளிலோ இந்திய பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளிலோ ஈடுபடுவதற்கு காரணமாக அமைந்தது.

ஏற்கனவே நான் தேவா அவர்களுடன் இணைந்து மூன்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இசை வழங்கியுள்ளேன். அவரது இசைக்குழுவில் உள்ள அனைவரும் நான் நன்கறிந்தவர்களே. அவர்கள் மூலமே நான் அண்மையில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு தெரிவுசெய்யப்பட்டேன்.

100க்கு மேற்பட்ட இந்திய இசைக் கலைஞர்களுடன் தனியொரு இலங்கை கலைஞனாக அந்த மேடையில் பங்குபற்றினேன்.

அந்த நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் வந்திருந்தார். அவருக்கு முன்னால் இசை வழங்கியமை, மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

15. ஒக்டபாட் இசைப்பது உங்களோடு நிறைவுபெற்றுவிடுமா? அல்லது அடுத்த தலைமுறைக்கு அந்த இசையை கடத்துவதில் ஏதும் பங்களிப்பு செய்கிறீர்களா?

நான் கடந்த ஐந்து வருடங்களாக ஒக்டபாட் இசை வகுப்புக்களை நடத்தி வருகிறேன். இதன் மூலம் பல மாணவர்களை உருவாக்கியுள்ளேன். எனது முகப்புத்தக காணொளிகளை பார்த்துவிட்டு பல மாணவர்கள் தாங்களாக ஒக்டபாட் வாசிக்க கற்றுக்கொள்வதாய் அவர்களே என்னிடம் கூறியுள்ளனர்.

16. இசைத்துறையில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்…?

இலங்கையில் தமிழ் இசைக் கலைஞர்களுக்கான மரியாதை இன்று வரை கிடைக்கவில்லை. சகோதர மொழி இசைக் கலைஞர்களுக்கு இருக்கின்ற மதிப்பு, செல்வாக்கு, தமிழ் இசைக் கலைஞர்களுக்கோ தமிழ் இசைக் குழுக்களுக்கோ கிடையாது. அவர்களுக்கான ஊதியத்தில் இன்னமும் உறுதியான நிலைப்பாடு இல்லை. இதில் மேடை இசைக் கலைஞர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

17. வளர்ந்துவரும் ஒக்டபாட் கலைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது…

மிருதங்கம் அல்லது ட்ரம்ஸ் இசைக்கருவியையும் முறைப்படி பயிலுங்கள். எதையும் முறைப்படி பயின்றால், உங்களது இசைத்துறையில் இன்னமும் பிரகாசிக்கலாம்.

நன்றி- வீரகேசரி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்