நியூஸிலாந்திற்கு எதிராக கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 39 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்களையும் இழந்தது.
குசல் ஜனித் பெரேரா 12 பந்துகளில் 3 ஓட்டங்களுடனும் அவிஷ்க பெர்னாண்டோ 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தனுஷ்க குணதிலக்க 30 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 24 ஓட்டங்களையும் லஹிரு மதுசங்க 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் மிச்செல் சான்ட்னர், டொட் ஆஸ்லே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
வெற்றி இலக்கான 126 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணிக்கு லசித் மாலிங்க தனது பந்துவீச்சின் மூலம் பெரும் அச்சுறுத்தல் விடுத்தார்.
மூன்றாவது ஓவரை வீசிய அவர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் முதலாவது ஹெட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தினார்.
தொடர்ந்து நான்காவது விக்கெட்டையும் வீழ்த்திய லசித் மாலிங்க, சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் 100 விக்கெட்கள் மைல் கல்லை கடந்த முதல் வீரராகவும் வரலாற்றில் பதிவானார்.
அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் 2 விக்கெட்கள் வீழ்த்தப்பட நியூஸிலாந்து அணி 47 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. எனினும், லக்சான் சந்தகேன் வீசிய ஓவரில் டிம் சௌத்தீ 3 சிக்ஸர்களை விளாசினார்.
இறுதியில் நியூஸிலாந்து அணி 16 ஓவர்களில் 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. எனினும், தொடரை 2 – 1 எனும் ஆட்டக்கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியது.